சென்னையில் ஓடும் ரயிலில் பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்கள்..!!

சென்னையை பொறுத்தவரை, காலம் காலமாகவே இரண்டு குறிப்பிட்ட கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இவர்கள் தாங்கள் செல்லும் பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் ‘ரூட்டு தல’ என்ற பட்டத்தை சூட்டி ஒரு மாணவரை நியமிப்பது வழக்கம். இதுதான் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளி ஆகும்.

சமீபகாலமாக போலீசார், மாணவர்கள் விஷயத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தாததால் கல்லூரி மாணவர்களின் அட்டூழியம் சென்னையில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பட்டப்பகலில் நடுரோட்டில் அரிவாள், கத்தியுடன் சண்டை போடும் அளவுக்கு மாணவர்களுக்கு துணிச்சல் வந்துவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட அண்ணாநகர் ரவுண்டானா அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் கூட்டமாக ஏறியுள்ளனர். அப்போது அவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் ரயில் பெட்டிகளில் தாளம் போட்டுக் கொண்டும் சென்றனர்.

அத்துடன் நிற்காமல், அவர்களில் சில மாணவர்கள் கையில் பட்டாக் கத்தியை எடுத்துக் கொண்டு நடைமேடைகளில் உரசியபடி சென்றனர். கல்லூரி மாணவர்களின் இந்த ரவுடித்தனத்தை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பல பயணிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், செல்போன் வீடியோக்களை ஆதாரமாக கொண்டு இந்த செயலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.