தமிழகம், கேரளா மற்றும் நாடு முழுவதும் சுமார் 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் சோதனை நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் ஒரேநாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, அசாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(SDPI) என்ற அமைப்பின் அலுவலகங்கள், மற்றும் அந்த அமைப்பினரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தினர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், இல்லங்களில் நடைபெற்ற சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் 22 பேரும், கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா 20 பேரும், தமிழகத்தில்10 பேரும் என மொத்தம் 106 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை மற்றும் மாநில காவல்துறையினர் ஒன்றாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் என்ஐஏ அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர்
அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM