சென்னையில் வாடிக்கையாளர்களின் ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு தொகையை கையாடல் செய்த வங்கி மேலாளர் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் & சிந்து வங்கியின் ஜார்ஜ்டவுன் மற்றும் அண்ணாசாலை கிளையின் மேனேஜராக 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை அண்ணா நகரைச் சேர்ந்த நிர்மலா ராணி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையை, அவர்களின் வேண்டுகோளின்றி தன்னிச்சையாக முடித்து, அந்த தொகைகளை வங்கி கணக்கிலிருந்து தன்னுடைய பெயரிலான கர்நாடக வங்கி கணக்கிற்கு மாற்றி ரூபாய் 1,23,00,000/- ஐ கையாடல் செய்துள்ளார். இதுதொடர்பாக பஞ்சாப் & சிந்து வங்கியின் மண்டல மேலாளர் கன்வர்லால் என்பவர் கொடுத்தப் புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவில் வழக்கு பதிவுசெய்து புலன் விசாரணை செய்தனர்.
விசாரணையில் வங்கியில் தொழிற்கடன் மற்றும் Letter of credit with Bank Guarantee கடன் பெறும் நிறுவனத்தினர்கள், தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் நிரந்தர வைப்பு தொகையை வைத்திருப்பர். பின்னர் தங்களுடைய Project முடிந்தவுடன் அந்த வைப்பு தொகையை திரும்ப பெறுவர். அந்த வகையில் இருந்த வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகை கணக்கிலிருந்து ரூபாய் 1,23,00,000/- த்தை கையாடல் செய்த மேலாளர் நிர்மலா ராணி, அதை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி அதிலிருந்து தனது கணவர் இளங்கோவன் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் மாற்றம் செய்து அந்த தொகையை ஏடிஎம்-களில் எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய அண்ணாநகரைச் சேர்ந்த மேனேஜர் நிர்மலாராணி (59) மற்றும் அவரது கணவர் இளங்கோவன் (62) ஆகியோரை நேற்று கைதுசெய்யப்ட்டு முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர் செய்து நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பண மோசடி விவகாரத்தில் நிர்மலா ராணி, ஏற்கனவே பஞ்சாப் & சிந்து வங்கிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM