சென்னை பஞ்சாப் சிந்த் வங்கியின் ஜார்ஜ் டவுன் மற்றும் அண்ணாசாலை கிளையின் மேலாளராக 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நிர்மலாராணி (59) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகைகளை வங்கி கணக்கிலிருந்து எடுத்து தன்னுடைய வங்கி கணக்குக்கும், கணவர் இளங்கோவன் வங்கி கணக்குக்கும் மாற்றியுள்ளார். இதுகுறித்து மண்டல மேலாளர் கன்வர்லால் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தார். அதில், மேலாளர் 1,23,00,000 ரூபாய் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வங்கி மோசடி தடுப்பு பிரிவின் உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் கொண்ட டீம் வங்கி மேலாளர் நிர்மலா ராணியிடம் விசாரணை நடத்தியது.
பின்னர் அவர் அளித்த தகவலின்படி நிர்மலாராணியின் கணவர் இளங்கோவனுக்கும் (62) இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடியில் ஈடுபட்ட நிர்மலாராணி வங்கியிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “வங்கியில் தொழிற்கடன் பெறும் நிறுவனங்கள் தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்ப நிரந்தர வைப்பு தொகையை வைத்திருப்பார்கள். பின்னர் தங்களின் பிராஜெக்ட் முடிந்ததும் அந்த நிரந்தர வைப்பு தொகையை திரும்ப பெற்றுவிடுவார்கள். அந்த நிரந்தர வைப்பு தொகையில்தான் மேலாளர் நிர்மலாராணி முறைகேடு செய்திருக்கிறார். வங்கியிலிருந்து பணத்தை தன்னுடைய கணவர் வங்கி கணக்குக்கும் அவர் மாற்றியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.