புதுடில்லி, :பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, ‘பிஎம் கேர்ஸ்’ நிதியின் புதிய அறங்காவலர்களாக, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர, புதிதாக ஆலோசனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் துவக்கத்தின்போது, அவசர கால நிகழ்வுகளுக்கு உதவும் வகையில், பிஎம் கேர்ஸ் நிதி துவக்கப்பட்டது. பொது அறக்கட்டளையாக உருவாக்கப்பட்ட இந்த நிதிக்கு, பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் நன்கொடை அளித்தனர்.
கடந்த 2020 – 2021 நிதியாண்டு வரை, இந்த நிதிக்கு, 10 ஆயிரத்து 990 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. அதில், 3,976 கோடி ரூபாய் பல்வேறு பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் நலனுக்காக, 1,000 கோடி ரூபாய், கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக, 1,392 கோடி ரூபாயும் இதில் அடங்கும்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த நிதியத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறங்காவலர்களாக உள்ளனர்.இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா ஆகியோர் அறங்காவலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிதியின் அறங்காவலர்கள் குழுக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில், புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.
இது குறித்து, பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த நிதிக்கு, தாராளமாக நன்கொடை அளித்த அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற புதிய அறங்காவலர்களை பிரதமர் வரவேற்றார். இந்த நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு உள்ள திட்டங்களுக்கு, அறங்காவலர்கள் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.அவசர காலங்களின் போது செயல்படுவது தொடர்பான தொலைநோக்கு திட்டங்கள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிதிக்கு, புதிதாக ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கையாளர் ராஜிவ் மெஹ்ரிஷி, ‘இன்போசிஸ்’ அறக்கட்டளை முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி, ‘டீச் பார் இந்தியா’ என்ற அரசு சாரா அமைப்பின் இணை நிறுவனர் ஆனந்த் ஷா ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement