குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடை விதிக்கக்கோரிய வழக்கில், உரிய விளக்கம் கேட்ட நீதிபதிகள் “அரசு தரப்பு வழக்கறிஞர் அரசுக்கு ஆதரவாக செயல்படுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல அவற்றில் தவறுகள் நிகழும் போது, அரசின் நோக்கம் பாதிக்கப்படாதவாறு காப்பதும் அவசியம்” என்று கூறி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த திசைவீரபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்”கடலாடி தாலுகா, மங்களம் கிராம மலட்டாற்று பகுதியில் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக மலட்டாறே திகழும் நிலையில், அளவுக்கு அதிகமாக இங்கு மணல் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதோடு, விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. கனிம வள விதிகளின் படி குவாரியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். ஆனால் இந்த குவாரியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. 15 அடி ஆழத்திற்கும் அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இது சட்ட விரோதமானது. ஆகவே கடலாடி தாலுகா மங்கலம் கிராமம் மலட்டாற்றில் மணல் குவாரி நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு,” குவாரி விவகாரங்களில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால், கடுமையாக தண்டிக்கப்படுவர். அரசு தரப்பு வழக்கறிஞர் அரசுக்கு ஆதரவாக செயல்படுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல அவற்றில் தவறுகள் நிகழும் போது, அரசின் நோக்கம் பாதிக்கப்படாதவாறு காப்பதும் அவசியம் எனக் குறிப்பிட்டு, அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM