தமிழ்நாடு அரசின் கடன் சுமை குறைந்துள்ளது – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி பண வீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

கரோனா காலத்தில் மக்களிடையே பணப்பழக்கம் குறையாத வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் சாமானிய மக்களுக்கு அவர்களின் வருவாய் தடைபெறாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 6 ஆண்டுகளாகதான் பிரச்சனை 

மத்திய அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு முன்னரே, தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. கரோனா காலகட்டத்திலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் 13 ஆயிரம் கோடி செலவில் பொது விநியோகம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தமிழக அரசு மேற்கொண்டது. 

தமிழகத்தின் வருவாய் அதிகரிக்கும் வேளையில், அரசின் கடன் குறைப்பு மற்றும் பெற்ற கடனுக்கான வட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டது. தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் மீண்டும் ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருந்ததில்லை. 2014ஆம் ஆண்டிற்கு பின்னான, கடந்த 6 ஆண்டுகளாக தான், தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

வருவாய் பற்றாக்குறை குறைந்தது

மாநில அரசுகள் கடன் பெறுவதில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு கட்டுப்பாடு இன்றி அதிகளவு கடன்களை பெற்று வருகிறது.திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று, பொது விநியோக திட்டத்தின் பங்களிப்பு, தேவையற்ற செலவுகளை குறைப்பது மற்றும் துறைகளின் மூலம் பெறக்கூடிய வருவாயை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டை விட 37% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட வருவாய் வரி 23% அதிகரித்துள்ளது. இதன்மூலம், அரசின் கடனும் சிறிது குறைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை 4.61% ஆக இருந்த நிலையில், தற்போது 3.50% ஆக குறைந்துள்ளது. இதனை வரும் காலங்களில் மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளோம்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.