மாணவர்களை திட்டிய வணிகர் சங்க தலைவர் மீது வன்கொடுமை வழக்கு பெரியமணலியில் கடைகள் அடைப்பு விசைத்தறிகளை நிறுத்தி போராட்டம்: போலீசார் குவிப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே பெரியமணலியில் பிளஸ் 2 மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாக வணிகர் சங்க தலைவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்து இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ளது பெரியமணலி.

இப்பகுதியில் ஹாலோபிரிக்ஸ் தொழிற்சாலை நடத்தி வருபவர் தங்கமணி (56). பெரியமணலி வணிகர் சங்க தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன் காரில் சென்றபோது, குறுகலான சாலையில் எதிரே வந்த தனியார் பள்ளி வேனுக்கு இடம் விடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவ்வழியே வந்த பெரியமணலி பழக்காரன்காடு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் 2 பேர், தங்கமணியை காரை பின்னோக்கி எடுக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, தங்கமணிக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் இது இருதரப்பு மோதலாக மாறி தாக்கியதில் தங்கமணி, அவரது மகன் பூபாலன், அவரது நண்பர் சேகர் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இரு தரப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில் எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாக தங்கமணி மற்றும் அவரது மகன் பூபாலன்(36), சேகர்(39) ஆகியோர் மீது போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தங்கமணி தரப்பினர் மீது போலீசார் வன்கொடுமை வழக்கு பொய்யாக போட்டுள்ளதாக கூறி, பெரிய மணலியை சேர்ந்த அனைத்து வணிகர் சங்கத்தினர் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று கடையடைப்பு போராட் டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து நோட்டீஸ் விநியோகம் செய்தனர். அதன்படி தங்கமணி தரப்பினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து இன்று பெரியமணலி கடைவீதியில் உள்ள மளிகை, அரிசி, பூக்கடை என அனைத்து கடைகளையும் மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விசைத்தறிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் பெரியமணலியில் உள்ள திருமண மண்ட பத்தில் நடந்து வருகிறது. இதில் வணிகர் சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.