ராகுல் காந்தி தான் கேப்டன் அசோக் கெலாட் பேச்சு…

“ராகுல் காந்தி பெயரை கேட்டு மக்கள் ஒற்றுமையாக எழுச்சியுடன் திரண்டு வருவதை அனைவரும் கண்கூடாக பார்க்க முடிகிறது, அவர் தொண்டர்களின் கேப்டன்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணத்தின் 15 வது நாள் பாதயாத்திரை முடிவில் த்ரிசூர் மாவட்டம் சாலகுடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அசோக் கெலாட் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ராகுல் காந்திக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பைக் கண்டு பாஜக-வுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ பதவி வகிக்கவில்லை என்றபோதும் நேரு குடும்பத்தின் மீதும் காங்கிரஸ் கட்சியின் மீதும் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் உள்ள நெருக்கத்தை பாஜக-வால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால் நேரு குடும்பத்தின் மீதும் ராகுல் காந்தி மீதும் தேவையற்ற விமர்சனங்களை செய்கின்றனர். நேரு குடும்பத்தில் இருந்து ஒருவர் தலைவரானால் பாஜக-வின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதால் அப்படி செய்கின்றனர். இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து ராகுல் காந்தி தன்னை நிரூபிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று பேசினார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 24ம் தேதி துவங்க உள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது, வேட்புமனு தாக்கல் செய்ய செப். 30 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் தேர்தல் குறித்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள ராகுல் காந்தி இந்த ஆலோசனைக்குப் பின் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பார் என்று தெரிகிறது.

ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் உறுதியாக உள்ள நிலையில் தலைவர் தேர்தலுக்கு போட்டி இருக்குமா என்பது குறித்து இன்னும் ஒருவாரம் கழித்து வேட்புமனு தாக்கல் நிறைவடையும் போதே தெரியவரும் என்று கூறப்படுகிறது.

தலைவர் குறித்து ஒருமனதாக முடிவு ஏற்படாவிட்டால் அக்டோபர் 17 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கேரள எம்.பி. சஷிதரூர், திக்விஜய் சிங், மனிஷ் திவாரி ஆகியோர் போட்டியிடக்கூடும் என்று ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது,

இந்த நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல் காந்தியை வலியுறுத்தப்போவதாக அசோக் கெலாட் ஏற்கனவே கூறியிருந்ததை அடுத்து, இது தொடர்பாக விவாதிப்பதற்காக கேரளா வந்திருக்கும் அசோக் கெலாட் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

செப். 23 ராகுல் காந்தி டெல்லி பயணம்… காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை…

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.