கடந்த 110 வருடமாக செயல்பட்டுவந்த ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்தாகி, மூடப்பட்டுள்ளது. இதனால் இதில் முதலீடு செய்திருந்தவர்களின் நிலை என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது!
கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி புனேவில் இருக்கும் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இது இன்று (22.09.22) முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி அந்த வங்கி அதிகாரப்பூர்வமாக செயல்பட முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
இந்த வங்கியில் போதுமான அளவு மூலதனம் இல்லாததாலும், லாபம் சம்பாதிக்க வழிவகை இல்லாததாலும், 1949 வங்கி விதிமுறைகளின்படி செயல்படாததாலும், இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது.
இந்த நிலையில், இந்த வங்கியில் முதலீடு செய்தவர்களின் பணம் என்னாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த வங்கியை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளும் எனவும், முதலீட்டாளர்களுக்கான பணம் விரைவில் செலுத்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆனால், வங்கி விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எவ்வளவு முதலீடு செய்திருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது..!