மதுரை: மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (23ம் தேதி) முதல் 3ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நாளை மாலை 4 மணக்கு நடைபெறும் விழாவில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து பேசுகிறார்கள். புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. கலை, இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு அரங்குகளில் தினந்தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சிறார் பயிலரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான படைப்பூக்கப் பயிலரங்கம் நடைபெறுகிறது. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை குழந்தைகளுக்கான ”சிறார் சினிமா” நிகழ்ச்சியும், மதியம் 3 மணி முதல் 4 மணி வரை எழுத்துலக பிரபலங்கள் பங்கேற்கும் ”பிரபலங்கள் வாசிக்கிறார்கள்” நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கதை கூறும் ”கதை கதையாம் காரணமாம்” போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தினமும் காலை 11.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரையில் மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாலை 4 மணி முதல் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், மாலை 5 மணி முதல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் ”சிந்தனை அரங்கம்” நிகழ்ச்சி நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.