புதிய மின்மாற்றியை தொடங்கி வைப்பதில் திமுக – அதிமுக இடையே போட்டா போட்டி

ஆரணியில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைப்பதில் திமுக – அதிமுக இடையே போட்டா போட்டி நடைபெற்றுள்ளது. திமுக நிர்வாகிகள் வருவதை அறிந்த ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் அவசர அவசரமாக மின்மாற்றிகளை தொடங்கி வைத்துக் கொண்டே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியப்பாடி, காமக்கூர், கைக்கிலந்தாங்கல் உள்ளிட்டப் பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் விவசாயிகள் பணிகளுக்காகவும், மேனிலை நீர்த் தேக்கத் தொட்டி நீரேற்றும் மின் தேவைக்காகவும், புதிய மின்மாற்றிகள் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் மூன்று மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை மின்வாரிய அலுவலர்களின் அழைப்புக் கடிதம் ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரனிடம் வழங்கப்பட்டு புதிய மின்மாற்றியை தொடங்கி வைப்பதாக இருந்தது.
இந்நிலையில் குன்னத்தூர் மற்றும் காமக்கூர் பகுதிகளில் மின் மாற்றி தொடக்க விழாவிற்கு திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் மூலம் கட்சியின் கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டிருந்த நிலையில், உடனடியாக ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் மின்மாற்றி தொடக்க விழாவிற்கு சென்றனர்.
image
பின்னர் ஆரணி சட்டமன்ற தொகுதி திமுக நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி, ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் பச்சையம்மாள் சீனிவாசன், கனிமொழி சுந்தர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் எஸ் எஸ் அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு மின்மாற்றி துவக்க விழாவிற்கு சென்றனர்.
திமுகவினர் வருவதை கண்ட ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனடியாக மின்மாற்றி துவக்கப் பணிகளை தொடங்கி கொண்டு மூன்று மின்மாற்றிகளையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்துக் கொண்டே சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின் தொடர்ந்து திமுகவினர் வருவதை கண்ட அதிமுகவினர், தங்களுடைய வாகனங்களை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் கிளம்பி சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள், ஆரணி மின்சார பொறியாளர் மற்றும் அலுவலர்களுடன் திமுகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ஆளும் கட்சியான எங்களை அழைத்து அசிங்கப்படுத்தும் அரசு அதிகாரிகளை வன்மையாக கண்டிப்பதாக திமுக நிர்வாகிகள் அதிகாரிகளை கண்டித்தனர். ஆரணியில் திமுக மற்றும் அதிமுக இடையே அதிகார போட்டிகளால் அரசு அதிகாரிகள் அல்லல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் நல பணிகள் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனடைகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.