தஞ்சாவூர்: .தஞ்சாவூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் காய்ச்சல் அதிகளவு பரவி வருவதை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறையினர் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். அவர்கள் என்ன வழிமுறை சொல்கிறார்களோ அதை பின்பற்றி தான் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. எங்கெல்லாம் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கிறதோ அங்கெல்லாம் மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கப்படும். பயப்படத்தேவையில்லை எனக் கூறியிருக்கின்றனர். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியம் இல்லை. இல்லம் தேடி கல்வி திட்டத்தை கலிபோர்னியா பல்கலைக்கழகம் பாராட்டி இருக்கிறது. உலக அளவில் கற்றல் திறன் 30 முதல் 40 சதவீதம் குறைந்துள்ள நிலையில், அதனை நாம் 65 சதவீதமாக குறைத்துள்ளோம். இந்த இடைவெளியை நாம் எப்படி குறைப்பது என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்க கல்விதான் கற்றலுக்கு அடிப்படை என்பதால் அதில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.