மதுரை: ‘‘முதல்வரின் மவுனம், விலைவாசி உயர்வை மறைப்பதற்காக ஆ.ராசா பேச வைக்கப்பட்டுள்ளாரா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தனது தொகுதிக்குட்பட்ட 72வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சுகாதார வளாகம், முத்துராமலிங்கம்புரம் 7வது மேட்டுத்தெருவிற்கு பேவர் ப்ளாக் சாலைப்பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆ.ராசா சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பேசி வருகிறார். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரா முகமாக அமைதி காத்து வருகிறார். இது ஆ.ராசாவுக்கு புதிதல்ல. அவர் எப்போதுமே வருத்தம் தரும் வார்த்தைகளை உதிர்ப்பவர்தான். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்கனவே முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசினார். அப்போதே திமுக தலைமை அழைத்து அவரை கண்டித்ததிருந்தால் தற்போதும் இவர் இப்படி பேசியிருக்க மாட்டார்.
ஆ.ராசாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், வாய்ப்பூட்டு சட்டம் போட வேண்டும். அப்போது தான் திமுகவிற்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச மதிப்பையும் காப்பாற்ற முடியும். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டுவரி உயர்வு உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக ஆ.ராசா பேச வைக்கப்பட்டுள்ளாரா என்று சந்தேகத்தை ஏற்படுகிறது. இதுவே அதிமுகவினர் இப்படி பேசி இருந்தால் கடுமையான நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்திருக்கும்.
திமுக, எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அடிதடியை கையில் எடுக்கும். மதுரையில் கூட ஒரு தாசில்தாரை திமுக தொண்டரணியை சேர்ந்த நபர் அடித்துள்ளார். இது போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்களை திமுகவை சேர்ந்தவர்கள் நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாக திறன் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அதனாலேயே, தமிழகத்தில் கட்டபஞ்சாயத்து, ஊழல் பெருகிப்போனது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை வஸ்துக்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.