தேசத்தின் தந்தை மோகன் பாகவத்இமாம் அமைப்பின் தலைவர் புகழாரம்| Dinamalar

புதுடில்லி :ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் நேற்று புதுடில்லியில் அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவரை சந்தித்து பேசியதுடன், இங்குள்ள மதரசாவுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மோகன் பாகவத்தை, ‘தேசத்தின் தந்தை’ என இமாம் அமைப்பின் தலைவர் பாராட்டினார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், முஸ்லிம் சமூகத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம் அறிஞர்கள், கல்வியாளர்கள் பலரை சந்தித்து பேசி உள்ளார்.இதன் ஒரு பகுதியாக, புதுடில்லியில் உள்ள அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசியை, புதுடில்லி கஸ்துாரிபா காந்தி மார்க்கில் உள்ள மசூதிக்கு நேற்று சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பின், வடக்கு டில்லியில் ஆசாத்பூர் என்ற இடத்தில் உள்ள முஸ்லிம் மதக் கல்வியை போதிக்கும் மதரசாவுக்கும் மோகன் பாகவத் நேற்று சென்றார். அங்கிருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மதரசாவில் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது மோகன் பாகவத்தை, ‘ராஷ்ட்ர பிதா’ என குறிப்பிட்டு, தேசத்தின் தந்தை என இமாம் பாராட்டினார். இதை ஏற்க மறுத்த பாகவத், ‘தேசத்தின் தந்தை ஒருவரே. நாம் அனைவரும் இந்த தேசத்தின் குழந்தைகள்’ என்றார்.’நம் நாட்டின் பெருமைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நம் வழிபாட்டு முறைகள் வேறாக இருந்தாலும், அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும்’ என மாணவர்களிடம் மோகன் பாகவத் தெரிவித்தார். மோகன் பாகவத், மதரசாவுக்கு செல்வது இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி கூறியதாவது:மோகன் பாகவத், ராஷ்ட்ர பிதா. நம் நாட்டை பலப்படுத்துவதற்கும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இருவரும் பல விஷயங்களை பேசினோம். என் அழைப்பை ஏற்று மதரசாவுக்கும், மசூதிக்கும் வந்தார்.

இந்த வருகையின் வாயிலாக, நாட்டை பலப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற செய்தியை அவர் தெரியப்படுத்தி உள்ளார். நம் அனைவருக்கும் நாடு தான் முதன்மையானது. மதமும், வழிபாட்டு முறையும் வெவ்வேறாக இருந்தாலும், நாம் அனைவருக்கும் ஒரே மரபணு தான். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ்., தலைவருடன், அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கிருஷ்ண கோபால், ராம் லால், இந்திரேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.