சென்னை: “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் டிஜிபி அலுவலகம் சென்று காவலர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் காவலர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை களைந்திட “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று காவலர்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார். முன்னதாக, சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்.