மனைவியுடன் உல்லாசம் கைதிகளுக்கு அனுமதி!| Dinamalar

சண்டிகர்:பஞ்சாபில், சிறை கைதிகள் தங்கள் மனைவியுடன் தனி அறையில் இரண்டு மணி நேரம் செலவழிக்க அனுமதி அளிக்கும் சிறப்பு சலுகையை அமல்படுத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிறைகளில் உள்ள கைதிகள், தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் இரண்டு மணி நேரம் செலவிட அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது.

வரும் 27-ம் தேதி முதல் இந்த சலுகை நடைமுறைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக, பஞ்சாபின் நபா நகரில் உள்ள கோயிந்த்வால் மத்திய சிறை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் சிறையில் இந்த சலுகையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறையில் நீண்ட காலமாக உள்ள நன்னடத்தை உடைய கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகையை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ‘கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள், அபாயகரான கைதிகள், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்படாது’ என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த சலுகையை பெறும் கைதி, சிறை வளாகத்தில் குளியலறையுடன் கூடிய தனி அறையில் தன் மனைவியுடன் இரண்டு மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கப்படும்.

இதன் வாயிலாக அவர்களின் திருமண பந்தம் மற்றும் பிணைப்பு அதிகரிக்கும்; கைதியிடம் ஒழுக்கமும், நன்னடத்தையும் கூடும்.இத்தகைய அனுமதி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். ஹெச்.ஐ.வி., மற்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றுடன் வரும் மனைவி அல்லது கணவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதுபோன்ற சலுகை, நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் அமலில் இல்லை. பஞ்சாப் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.