புதுடில்லி, :மாரடைப்பால் காலமான காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல், நவீன முறையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு, கடந்த ஆக., 10ல் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, 40 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் காலமானார்.உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் கீழே விழுந்ததால், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
. அதனால், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.ஆனால், வழக்கமான உடலை கிழிக்கும் முறையில் அல்லாமல், ‘விர்சுவல்’ முறையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.இது குறித்து டாக்டர்கள் கூறியுள்ளதாவது:விர்சுவல் முறையில், ‘சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே’ ஆகியவற்றின் உதவியுடன், உடல் முழுதும் பரிசோதனை செய்யப்படும். இதன் வாயிலாக உடலில் சிறிய அளவு எலும்பு முறிவு, ரத்தக் கட்டு போன்றவை இருந்தாலும் தெரிய வரும்.உயிரிழந்தோரின் குடும்பத்தார் மன உணர்வு மற்றும் மத உணர்வுகளை மதிக்கும் வகையில், இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.
வழக்கமான பிரேத பரிசோதனைக்கு, மூன்று மணி நேரம் வரை ஆகும். ஆனால், இந்த புதிய முறையில், 30 நிமிடங்களில் பரிசோதனைகள் முடிந்து விடும்.இந்த விர்சுவல் பிரேத பரிசோதனை முறை, நம் நாட்டில் 2020ல் அறிமுகம் செய்யப்பட்டது. புதுடில்லி எய்ம்சில் மட்டுமே இந்த வசதி உள்ளது. ஆண்டுக்கு, 3,000 விர்சுவல் பிரேத பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து ராஜு ஸ்ரீவஸ்சவாவின் உடல் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுடில்லி காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில், ஹிந்து முறைப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement