புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனைக்குப் பின்னர், அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் செயல்பட்டு வந்த நேஷனல் டெவலப்மென்ட் பண்ட், கர்நாடகாவைச் சேர்ந்த கர்நாடக ஃபோரம் ஃபார் டிக்னிட்டி, தமிழகத்தை சேர்ந்த மனித நீதி பாசறை ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தொடங்கின.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ அமைப்புக்கு 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. 2010-ல் கேரளாவில் பேராசிரியர் ஜோசபின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம், டெல்லி ஷாகின் பாக் போராட்டம், உத்தரப் பிரதேசத்தின் கான்பூர், பிரயாக்ராஜ், சஹாரன்பூர் கலவரம், கர்நாடகா ஹிஜாப் கலவரம், ராஜஸ்தானின் உதய்பூரில் கண்ணையா லால் கொலை மற்றும் கேரளா, கர்நாடகாவில் பல்வேறு கொலை வழக்குகளில் பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஜார்க் கண்ட் மாநிலத்தில் மட்டும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு பிரதமர் மோடி சென்றபோது, அவரைக் கொல்லத் திட்டமிட்டதாக 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும், பிஎஃப்ஐ அமைப்புக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பாட்னாவில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும், கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு பாட்னாவில் ஆயுதப் பயிற்சி அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல, தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாக அப்துல் காதர் உள்ளிட்டோர் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கையும் என்ஐஏ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஆந்திரா, தெலங்கானாவில் 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
நடப்பாண்டு தொடக்கத்தில் கேரளாவின் மூணாறைச் சேர்ந்த பிஎஃப்ஐ நிர்வாகிகள் அப்துல் ரசாக், அஷ்ரப் ஆகியோர் ரூ.22 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. விசாரணையில், வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து பிஎஃப்ஐ அமைப்புக்கு நிதியுதவி கிடைப்பது தெரியவந்தது. இதேபோல, எஸ்டிபிஐ நிர்வாகிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
300-க்கும் மேற்பட்ட அலுவலர்கள்
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து 15 மாநிலங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
உத்தரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், புதுச்சேரி, அசாம், மகாராஷ்டிரா, பிஹார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சுமார் 200 செல்போன்கள், 100 லேப்டாப் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இதுதவிர, வங்கிக் கணக்குகள், ஆவணங்களும் பரிசோதிக்கப்பட்டன.
இந்த சோதனையின்போது, தமிழகத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, முகமது யூசுப், இஸ்மாயில் உள்ளிட்ட 45 பேரைக் கைது செய்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இன்று முழுஅடைப்பு
இதுகுறித்து பிஎஃப்ஐ கேரள மாநிலப் பொதுச் செயலர் அப்துல் சத்தார் கூறும்போது, “ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் மத்திய அரசு செயல்படுகிறது. சிறுபான்மை அமைப்புகளுக்கு எதிராக மத்தியப் புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுகின்றன. இதைக் கண்டித்து கேரளாவில் செப். 23-ம் தேதி (இன்று) முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளா, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் சோதனை
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிஎஃப்ஐ தலைமை அலுவலகத்தில் நடத்திய சோத னையின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பிஎஃப்ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரான கோவை கரும்புக்கடை சவுகார் நகரைச் சேர்ந்த ஏ.எஸ்.இஸ்மாயில்(43) வீட்டுக்குச் சென்ற என்ஐஏ அதிகாரிகள், அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். பணப் பரிமாற்றம், சந்தேகத்துக்குரிய தகவல்கள் பரிமாற்றம், ஆவணங்கள் தொடர்பாக வீடு முழுவதும் சோதனை செய்தனர். பின்னர், விசாரணைக்காக இஸ்மாயிலை கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
பிஎஃப்ஐ அமைப்பின் கர்நாடக மாநிலச் செயலர் சாதிக் முகமது, தனது உதவியாளருடன் நேற்று காலை ரயில் மூலம் மலப்புரத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூருவுக்குச் சென்று கொண்டிருந்தார். கோவை ரயில் நிலையத்தில் இருவரையும் பிடித்து, விசாரணை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், பின்னர் உதவியாளரை விடுவித்துவிட்டு, சாதிக் முக மதுவை தங்களுடன் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
பிஎஃப்ஐ அமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் ஜாகீர் உசேனின் வீடு காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள ஜாகீர் உசேன் நகரில் உள்ளது. அங்கும் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், அவரது மடிக்கணினி, செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், விசாரணைக்காக ஜாகீர் உசேனை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
காரைக்கால் தோமாஸ் அருள் வீதியில் உள்ள, புதுச்சேரி மாநில எஸ்டிபிஐ மாநிலத் துணைத் தலைவர் முகமது பிலால், காமராஜர் சாலையில் உள்ள ஹசன் குத்தூஸ், திருமலைராயன்பட்டினம் பகுதி யில் உள்ள எஸ்டிபிஐ நிர்வாகி பக்ருதீன் ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் மூவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். முன்னதாக, அவர்களது வீடுகளில் இருந்து பென் ட்ரைவ், லேப்டாப் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள அறிவகம் பெண்கள் மதராஸா கல்லூரியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நள்ளிரவில் சோதனை ஏன்?
சோதனை குறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறும்போது, “ஏற்கெனவே பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் எழுந்தன. இதைத் தவிர்க்கவே, நள்ளிரவில் சோதனையைத் தொடங்கினோம். எங்கெங்கு சோதனை நடத்த வேண்டும், யாரை விசாரிக்க வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். சில நகரங்களில் காலை வரை சோதனை நீடித்தது.
ஆதாரங்களின் அடிப்படையில் 45 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.
அமித் ஷா உயர்நிலை ஆலோசனை
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா, என்ஐஏ இயக்குநர் தினகர் குப்தா மற்றும் அமலாக்கத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வெளிநாட்டு தீவிரவாத தொடர்புகள், மேல்நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.