Tamil Nadu News: சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் மக்கள் அரசை எதிர்த்து கடந்த சில நாட்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனம்பாக்கத்தில் இருக்கும் சென்னை விமான நிலையத்தை விட பிரமாண்டமாக பரந்தூரில் கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கும் தமிழக அரசிற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.
சென்னையின் புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இதன் விளைவாக பரந்தூரில் வசிக்கும் மக்கள் வீட்டின் முன் கருப்பு கோடி கட்டுவது, போராட்டத்தில் ஈடுபடுவது என்று பல்வேறு விதத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து தற்போது, பரந்தூர் நிலங்களை பத்திரப் பதிவு செய்ய தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட சார்பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் எழுதியுள்ள கடிதத்தில், பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணி தொடங்கவுள்ளதால் அந்த பகுதியில் நிலங்களை வைத்துள்ளவர்கள் இனி பத்திரப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்றிதழை பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்று பெற்றவர்களின் பத்திரப்பதிவை மட்டுமே ஏற்கவேண்டும் என்றும், சார்பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பரந்தூரில் பத்திரப்பதிவு குறித்த வருவாய்த்துறையினரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பகுதி மக்கள் தமிழக அரசிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil