கராச்சி,
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கராச்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பாக தொடக்கம் அமைத்த இந்த ஜோடியில் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மலான் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து பிலிப் சால்ட்டும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கி அதிரடி காட்டி வந்த பென் டுக்கெட் 43 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹேரி பூருக் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த மொயின் அலி, சாம் கரண் ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர். இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய மொயின் அலி தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இறுதியில் மொயின் அலி 55 (33) ரன்களும், சாம் கரண் 10 (8) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக தஹானி மற்றும் ஹாரிஸ் ராவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது நவாஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சார்பில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த பாபர் அசாமும், ரிஸ்வானும் தங்கள் அரை சதத்தை பதிவு செய்தனர்.
தொடர்ந்து அதிரடிகாட்டிய இந்த ஜோடியில் கேப்டன் பாபர் அசாம் 62 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் பாபர் அசாம் 110 (66) ரன்களும், முகமது ரிஸ்வான் 88 (51) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 19.3 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து , பாகிஸ்தான் அணிகள் சமநிலையில் உள்ளன.