வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரிஸ்: ஈரானில், ‘ஹிஜாப்’ அணிவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில், 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள, மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தையும், தலை முடியையும் மறைக்கும் துணி மற்றும் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் கறுப்பு அங்கியை அணிவது கட்டாயமாகும்.
அவ்வாறு அணியாதவர்களை கண்காணிப்பதற்காகவே ஒழுக்க கண்காணிப்பு காவலர்கள் உள்ளனர். இவர்கள் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம், சிறை தண்டனை ஆகியவற்றை வழங்குகின்றனர்.
இந்நிலையில், மாசா அமினி, 22, என்ற பெண், தலைமுடியை முழுமையாக மறைக்கும் விதமாக ஹிஜாப் அணியாததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கோமா நிலைக்கு சென்று, மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இது குறித்து ஐரோப்பிய நாடான நார்வேயின் ஓஸ்லோவை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஈரான் மனித உரிமை அமைப்பின் இயக்குநர் மஹ்மூத் அமிரி மோகதம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் முதலில் போராட்டம் துவங்கியது. தற்போது, 30க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்; பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, 31 பேர் போராட்டங்களின்போது கொல்லப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement