அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை இயக்கிய ராம்நாத் தற்போது ஆதார் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் கருணாஸ் கதையின் நாயகனாகவும், அருண்பாண்டியன், ரித்திகா, திலீப், பாகுபலி பிரபாகர் மற்றும் உமா ரியாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆதார் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய கட்டிடத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் கருணாஸ், அவருக்கும் ரித்திகாவிற்கு திருமணமாகி குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த அடுத்த நாளே ரித்திகா காணாமல் போய் விடுகிறார். பின்பு தனது மனைவியை கண்டுபிடித்து கொடுக்க போலீசில் புகார் அளிக்கிறார் கருணாஸ். இறுதியில் தனது மனைவியை கண்டுபிடித்தாரா? உண்மையில் ரித்விகாவிற்கு என்ன ஆனது என்பதே ஆதார் படத்தின் கதை.
உணர்வு பூர்வமான கதைகளை படமாக எடுப்பதில் வல்லவர் இயக்குனர் ராம்நாத். அதே போல ஆதார் படத்தையும் உணர்ச்சிமிக்க மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று நினைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார். கூலி வேலை பார்க்கும் தொழிலாளியாக கருணாஸ் வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம். அவரது எதார்த்தமான நடிப்பு கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. பச்சமுத்து என்ற கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை தத்ரூபமாக கொடுத்துள்ளார். வயதான போலீஸ் கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன் சிறப்பாக நடித்து உள்ளார், அவரது நடிப்பு ஆதார் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. ரித்திகா மற்றும் இனியா சிறிது நேரங்களே திரையில் வந்தாலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாகுபலி பிரபாகர் வழக்கம்போல டெரரான போலீஸ் இன்ஸ்பெக்டராக கலக்கி உள்ளார். இவர்களை தாண்டி உமா ரியாஸ் கான் நேர்த்தியான நடிப்பின் மூலம் தனியாக தெரிகிறார். கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது வியாபார நோக்கங்களுக்காக சாதாரண மனிதர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை ஆதார் பணம் தத்ரூபமாக காட்டி உள்ளது. கார்ப்பரேட்டுகளின் கைப்பிடியில் அரசாங்கமும், அரசாங்க ஊழியர்களும் எப்படி தவிக்கிறார்கள் என்பதையும் இப்படம் உணர்த்துகிறது. தனது மனைவியை கண்டுபிடித்து தரக் கோரி கேட்கும் பொழுது எல்லாம் கருணாசின் நடிப்பு உச்சக்கட்டம். கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி பலவிதமான படங்கள் வந்திருந்தாலும் அதில் ஆதார் தனித்து நிற்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையை இன்னும் சற்று வேகமாக எடிட்டிங் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆதார் நிச்சயம் உங்களை அழ வைக்கும்.