ஏழையிலும் ஏழையானவர்களுக்கு பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் சமத்துவமான அரசியலமைப்பா?: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு ஏழையிலும் ஏழையானவர்களுக்கு என்று கூறிவிட்டு உண்மையிலேயே பாதிக்கப்பட்ட சமூகங்களை புறக்கணித்தது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியில் பாஜக அரசு ஆட்சி  அமைத்த பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக அது அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்தர பட், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவில் செய்யப்பட்ட திருத்தம் அதன் அடிப்படை அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறினார். சமூதாயத்தில் தற்போது பின்தங்கிய ஒரு சமூகம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அப்படி இருக்காது என்று அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரவீந்திர பட் 40 சதவீத பழங்குடியின மக்கள் சமூதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏழையிலும் ஏழையானவர்கள் என்றாலும் அவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுவதாக கூறினார்.

பழங்குடியினர், பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தான் ஏழையிலும் ஏழையானவர்கள் என்று கூறிவிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உங்களுக்கு கிடையாது என்று கூறுவது தான் சமத்துவமான அரசியலமைப்பா என அவர் கேள்வி எழுப்பினர். பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என்பதற்கான வரையறையே தெளிவற்றதாக உள்ளதாக நீதிபதி ரவீந்திர பட் சுட்டிக்காட்டினார். பொருளாதார ரீதியான அளவுகோல் தாற்காலிகமானது தான் என்றும், சமூதாய ரீதியான அளவுகோல் தான் நிலையானது என்றும் தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அடையாளம் காண சரியான வழிகாட்டுதல்கள் கூட வகுக்கப்படவில்லை என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி சுட்டிக்காட்டினார். இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பொதுப் பிரிவினருக்கான 50 சதவீதத்தில் இருந்து இந்த 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த நீதிபதிகள் அது குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.