கெய்ரோ: எகிப்தில் சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான பாலாடைக் கட்டியை (சீஸ்) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை மனித உடல்கள், ஆபரணங்கள், சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சீஸை கண்டுபிடித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பானையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சீஸ் கிமு 688 மற்றும் 525 காலகட்டத்திற்கு இடையப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பாலாபாலாடைக்கட்டிடைக்கட்டி
மனித இனம் பாலை பயன்படுத்திய காலத்திலிருந்தே பாலாடைக்கட்டியான சீஸையும் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இது எந்த காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது என சரியாக கணிக்கமுடியவில்லை. ஆனால் இந்த சீஸ் பயன்பாட்டுக்கு வந்தது தொடர்பாக சுவையான ஒரு கற்பனை கதையும் சொல்லப்படுகிறது. அதாவது சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் சீஸை பயன்படுத்த தொடங்கியிருக்க வேண்டும்.
கதை
ஈராக் பாலைவனங்களில் மனிதன் நீண்ட நாட்களாக பயணத்தில் ஈடுபடும் போது பாலை, ஆட்டு தோலினால் ஆன தோல் பையில் சேமித்து வைத்திருந்திருந்து கொண்டு சென்றான். அப்போது அப்பைகளிலுள்ள ரெனின் எனப்படும் செரிம நொதியும், சூரிய வெப்பமும் ஒன்றாக கலந்து பாலை நொதிய வைத்து கட்டியாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆக இப்படியாக உலகம் முழுவதும் சீஸ் பரவியிருக்கலாம் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.
செம்மறி ஆட்டு பால் சீஸ்
இந்த கதையை உறுதி செய்யும் வகையில், பாலைவன பிரதேசமாக உள்ள எகிப்தில் சுமார் 2,600 பழமையான மண்பாண்டம் ஒன்றிலிருந்து சீஸை கண்டுபிடித்துள்ளனர். இது சைப்ரஸ்/ஹலோமி வகை சீஸ் என சொல்லப்படுகிறது. அதாவது செம்மறி ஆட்டு பாலை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை சீஸ்தான் சைப்ரஸ் என அழைக்கப்படும். இந்த வகையான சீஸ்கள் எளிதில் உருகும் தன்மை கொண்டது. எனவே கறியை சமைக்க இந்த சீஸ்கள் அதிகம் பயன்பட்டிருக்கலாம்.
பிரமிடுகள்
எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு 20 கி.மீ தொலைவில் உள்ள சக்காரா எனும் பழமையான நகரத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வினை மேற்கொண்டபோது இதனை கண்டறிந்துள்ளனர். இந்த நகரம் பல கல்லறைகளை உள்ளடக்கிய பிரமிடுகளை கொண்ட தொன்மையான நகரமாகும். ஆனால் இதை விட ஒரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், இதெல்லாம் அவ்ளோ பெரிய சீஸ் கெடையாது என்று ஆய்வாளர்கள் கூறுவதுதான்.
பழமையான சீஸ்
அதாவது கடந்த 2018ல் இதேபோல எகிப்தில் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது அங்கு அவர்களுக்கு ஒரு பெரிய சைஸ் பானை கிடைத்துள்ளது. இந்த பானை கிமு 13ம் நூற்றாண்டில் உயர் பதவியில் இருந்த எகிப்திய அதிகாரியான ‘Ptahmes’ என்பவருக்கு சொந்தமானது. சரி இந்த பானையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆய்வு செய்யலாம் என ஆய்வாளர்கள் தங்களது மூக்குக்கண்ணாடியை சற்று மேல் உயர்த்தி பார்த்தபோது, அதில் சீஸ் இருந்திருக்கிறது. இந்துதான் உலகின் மிக பழமையான சீஸ். இது சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.