பிரதமர் பதவிக்கு பேராசை கொண்டவர் நிதிஷ் பாபு -அமித் ஷா ஆவேசம்

Bihar News: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் மாநிலம் பூர்னியாவில் உள்ள ரங்கபூமி மைதானத்தில் நடைபெற்ற “ஜன் பவ்னா பேரணி”யில் உரையாற்றிய போது, ​​முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் இருவரையும் கடுமையாக சாடினார். தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் முதுகில் குத்திய நிதிஷ் பாபு, இன்று ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸின் மடியில் அமர்ந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். இரண்டு நாள் பயணமாக பீகார் மாநிலம் சென்றுள்ள அமித் ஷாவின் பயணம் 2024 லோக்சபா தேர்தலுக்கான ஒத்திகையாக பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் பாஜக ஆட்சியை இழந்த பிறகு அமித்ஷாவின் முதல் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜன் பவ்னா பேரணியில் தொடர்ந்து உரையாற்றிய அமித் ஷா, “நிதீஷ் பாபு அவர்களே, இந்திய மக்கள் இப்போது விழிப்படைந்துள்ளனர். சுயநலம் மற்றும் வக்கிர அரசியலால் யாரும் பிரதமராக முடியாது. நாட்டில் வளர்ச்சிப் பணிகளைச் செய்து, சித்தாந்தத்தின் மீது பற்று வைத்து, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒருவரை தான் நாட்டு மக்கள் பிரதமராக்குகிறார்கள்.

பாஜகவுக்கு துரோகம் செய்து, சுயநலம் மற்றும் அதிகார அரசியலை நிதீஷ் ஜி காட்டியுள்ளார். தற்போது பீகார் நிலம் மாற்றத்தின் மையமாக உள்ளது. இந்த மாற்றம் பீகார் மண்ணில் இருந்து தொடங்கும் என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து பேசுகையில், “இன்று நான் எல்லையோர மாவட்டங்களுக்கு வந்துள்ளேன். அதனால் லாலு ஜி மற்றும் நிதிஷ் ஜி அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பீகாரில் போராட்டத்தை தூண்ட வந்துள்ளோம், மாநிலத்தில் ஏதாவது பிரச்சனை செய்வோம் என்றெல்லாம் அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எனக்கு லாலு ஜி கூட சண்டை போட அவசியமில்லை. நீங்கள் போதும் சண்டை போட. உங்கள் வாழ்நாள் முழுவதும் அதையே செய்திருக்கிறீர்கள்.

ஆனால், இன்று நான் எல்லையோர மாவட்ட சகோதர, சகோதரிகளிடம் இதை சொல்ல வந்தேன், “பீகார் மாநிலத்தில் ஆளும் ஆட்சியில் லாலு கைகோர்த்துள்ளார். தற்போது லாலு ஜியின் மடியில் நிதீஷ் ஜி அமர்ந்திருகிறார். இவர்கள் இணைந்துள்ளதால், எல்லையோர மாவட்ட மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. நீங்கள் வசிப்பது இந்தியாவின் ஒரு பகுதி. நமது நாட்டில் நரேந்திர மோடியின் ஆட்சி நடைபெறுகிறது. பயப்படவேண்டாம் என்பதைச் சொல்ல இங்கே  வந்தேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 

அமித் ஷாவின் வருகை பாஜகவின் முக்கிய வியூகமாக கருதப்படுகிறது. சீமாஞ்சல் பகுதியில் இரண்டு நாட்கள் தங்கும் அவர், தனது பயணத்தின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் பல முக்கிய ஆலோசனைகள் நடத்தவுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.