டொரன்டோ: கனடாவில் அண்மைக்காலமாக இனவாத வெறுப்புத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் இந்திய மாணவர்கள் கவனமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் செய்திக் குறிப்பில், “வெறுப்புத் தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தூதரகம் வாயிலாக கனடா நாட்டிற்கு இந்தக் குற்றங்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
அதிகரிக்கும் குற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்திய மக்களும், மாணவர்களும் இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் செல்லும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே அங்கே வாழும் இந்திய மாணவர்களும், இந்தியர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம். அங்குள்ள இந்தியர்கள் ஒட்டாவா, டொரன்டோ, வான்கூரில் உள்ள தூதரகங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அப்போதுதான் ஏதேனும் அவசரநிலை ஏற்படும்போது உங்களால் துணைத் தூதரகம், தூதரக ஜெனரலுடன் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையில் வெளியான தகவல்: உலக அளவில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Network Contagion Research Institute) தலைவரும், அதன் இணை நிறுவனருமான ஜோயல் ஃபிங்கள்ஸ்டீன் இது குறித்து கூறுகையில், “இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள், மீம்ஸ் போன்றவை 1000% அதிகரித்துள்ளதைக் காண்கிறோம். வெள்ளை இனத்தவரும், இஸ்லாமியர்களும் இன்னும் பிறரும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.
அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த சில நாட்களாகவே இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. அதேபோன்ற கீழ்த்தரமான விஷயங்கள் தற்போது பிரிட்டனிலும் நடந்துள்ளது. இந்துஃபோபியா என்ற இந்து வெறுப்பு மிகவும் சிக்கலானது. இந்த அபாயகரமான போக்கு அண்மைக்காலமாக வளர்ந்து வருகிறது” என்றார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹேங்க் ஜான்சன் கூறுகையில், “மதங்களுக்கு எதிரான வெறுப்பு துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக நிறைய வெறுப்புச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்துக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதை மதிக்க வேண்டும். இந்து வெறுப்பு பற்றி பேசுவது மிகவும் சிரமமாக இருக்கிறது” என்றார்.