புதுடெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளின் மூலம் ரூ.100 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அவை பாகிஸ்தான், துருக்கி உளவு அமைப்புகளின் மூலம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கிட்டதட்ட ஓராண்டாக ஆதாரங்களை சேகரித்து நேற்று என்ஐஏ சோதனை நடத்தியது அம்பலமாகி உள்ளது.
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறையினர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணையும்படி மக்களைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் 93 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். அந்த வகையில் நாடு முழுவதும் அந்த அமைப்பினைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 45 பேர் மேற்கண்ட அமைப்புகளின் நிர்வாகிகள் ஆவர்.
ஏற்கனவே என்ஐஏ கடந்த சில வாரங்களாக தெலங்கானா, ஆந்திரா, அசாம் போன்ற மாநிலங்களில் சில அமைப்புகளை சேர்ந்த சிலரை கைது செய்தது. அவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு தொடர்பாக மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த 5 பேரை என்ஐஏ கைது செய்திருந்தது. அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது உத்தரபிரதேச மாநில சிறப்பு புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் அதிகளவில் நடந்துள்ளன.
வெளிநாடுகளில் இருந்தும் போலி கணக்குகள் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் மதவெறியை தூண்டுவதற்காகவும், இந்தியாவுக்கு எதிராக சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி சதிவேலைகளில் ஈடுபட முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நேற்று நாடு முழுவதும் என்ஐஏ சோதனைகளை நடத்தியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்திய உளவு அமைப்புகள், என்ஐஏ நடத்திய விசாரணையில் வெளிநாட்டில் இருந்து அதிகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் மூலம் துருக்கியின் புலனாய்வு அமைப்பு இந்த அமைப்புக்கு நிதியுதவி செய்துள்ளது.
உத்தரபிரதேச ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் மற்றும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் சட்டவிரோத பணப்பரிமாற்றம் அதிகளவில் நடந்ததாக உத்தரபிரதேச சிறப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் என்ஐஏ கொடுத்த தகவல்களை கடந்த ஓராண்டாக அமலாக்கத்துறை சேகரித்தது. அதன் அடிப்படையிலேயே தற்போது ரெய்டுகள் நடந்துள்ளன. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வங்கி கணக்குகள் மூலம், இந்தியாவில் வசிக்கும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்புவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்தியாவில் மதவெறியை தூண்டுவதற்காக வௌிநாட்டில் வசிப்பவர்கள் மூலம் இந்திய உறவினர்களுக்கு பணம் அனுப்பும் போது, அதற்காக அவர்களுக்கு ஹவாலா மூலம் அதிக கமிஷன் வழங்கப்பட்டுள்ளது.
துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வௌிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு பணம் கிடைத்துள்ளது. அவர்கள் தங்களது உறவினர்களுக்கு சட்டவிரோதமான முறையில் பணப்பரிவர்த்தனை செய்துள்ளனர். அதேநேரம் இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் ரூ.100 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அந்த பரிவர்த்தனைகள் சில போலி நிறுவனங்கள் மூலமும் நடந்துள்ளது. இந்த அமைப்புடன் தொடர்புடைய சிலரது வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் பரிமாற்றம் குறித்த தகவல்களும் கிடைத்தன. தற்போது கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.