“கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால்தான் திருமணத்துக்கு அனுமதிப்பார்கள்!" – சரணடைந்த மாவோயிஸ்ட் பேட்டி

“குழந்தை பெற்றுக்கொள்வது மற்றும் குழந்தை பராமரிப்பு இயக்கத்துக்கு தடையாக அமையக்கூடும். எனவே, இயக்கத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்” என்று போலீஸில் சரணடைந்த மாவோயிஸ்டுகள் கூறியிருக்கின்றனர்.

கம்லு வெட்டி என்பவர் மாவோயிஸ்டாக இணைந்தபோது அவருக்கு வயது 12. அவர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய 22-வது வயதில் திருமணம் செய்திருக்கிறார். இது தொடர்பாக என்.டி.டி.வி-க்கு பேட்டிக் கொடுத்த கம்லு வெட்டி, “மாவோயிஸ்டுகளுக்கான விதிப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பும் பணியாளர்கள் கருத்தடை அறுவை சிகிச்சை (வாசெக்டோமி) செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால், குழந்தை பெற்றுக்கொள்வது மற்றும் குழந்தை பராமரிப்பு… இவை இயக்கத்துக்கு தடையாக அமையக்கூடும். அதோடு, இதை காரணம் காட்டி தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்லக்கூடும். எனவே, இயக்கம் பாதிக்கப்படும். அதனால் இயக்கத்தில் இருப்பவர்கள் யாராவது திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். நானும் அந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

மாவோயிஸ்ட்

கம்லு வெட்டி கடந்தாண்டு சரணடைந்தார். 27 வயதாகும் கம்லு வெட்டிக்கு மாவோயிஸ்ட்டிலிருந்து வெளியேறிய பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், அவர் ரிவர்ஸ் வாசெக்டோமி அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது அவரும் அவர் மனைவியும் ஒரு குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

2006-ல் கம்லு வெட்டியின் கிராமம் சல்வா ஜூடுமால் முழுவதும் எரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்துக்கு பிறகு, அந்தப் பகுதியின் தளபதிகள் ஹரேராம், வசந்தி ஆகியோர் அந்த இயக்கத்தில் சேர அவரை வற்புறுத்தியிருக்கின்றனர். அதனால் அவர் அதில் இணைந்தார். பின்னனர், கம்லு 2017-ம் ஆண்டு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தபோது, வாசெக்டோமி அறுவை சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.

இது குறித்து அவர், “நாங்கள் திருமணம் செய்ய விரும்புவதாய் தலைவரிடம் கூறினோம். அப்போது அவர், `அனுமதிக்கிறோம், ஆனால் வாசெக்டோமி அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான்’ என்றார். இப்போது எங்களுக்கு கிராம மக்களின் ஆதரவோ, உணவோ கிடைப்பதில்லை. அதனால் சரணடைந்தோம். இந்த காலகட்டத்தில் நாங்கள் ஒருவரையொருவர் விரும்பினோம். பிறகு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்தோம். எனவே, ரிவர்ஸ் வாசெக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர், “பஸ்தார் இன பழங்குடி பணியாளர்கள் தெலுங்கு பேசும் மாவோயிஸ்டு தலைவர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் பஸ்தார் இன பணியாளர்களை முன்வரிசையில் போராட நிறுத்துவர். பணியாளர்கள் எல்லாம் வாசெக்டோமி அறுவை சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆனால், உயர் பதவியில் இருப்பவர்கள் சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்கின்றனர்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

செய்தி நிறுவனத்திடம் பேசிய சரணடைந்த மற்றொருவர், “என் மனைவியும் மகளும் எனக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள முகாமில் இருக்கின்றனர்” என கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

இது குறித்து சட்டீஸ்கரின் சுக்மா காவல் கண்காணிப்பாளர் சுனில் ஷர்மா கூறுகையில், “கிளர்ச்சியாளர்கள் முகாமில் முன்வைக்கும் முக்கிய நிபந்தனை, `திருமணம் செய்துகொள்ள விரும்பும் பணியாளர்கள் வாசெக்டோமி அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்’ என்பதுதான். இவர்கள் சரணடைந்துவிட்டனர். எனவே விரும்புகிறவர்களுக்கு, ரிவர்ஸ் வாசெக்டோமி அறுவை சிகிச்சை ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இலவசமாக செய்துகொடுக்கப்படும்” என்றார்.

Article Source: NDTV

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.