பெய்ஜிங்: சீனாவில் டிக் டாக் மோகத்தால் ராட்சத பலூனில் சிக்கிக் கொண்ட இளைஞர் ஒருவர் மூன்று நாட்களாக சுமார் 400 கி.மீ. தூரம் அதில் தொங்கியபடியே பறந்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவின் வடகிழக்கில் அமைந்துள்ள ஹெய்லாங்ஜோங் மாகாணத்தின் முடன்ஜியாங் நகரைச் சேர்ந்தவர் சென்ஜிங் ஹு (25). இவரது நண்பர் ஜியாங் வேய் (26). கல்லூரி கால நண்பர்களான இவர்கள், பட்டப்படிப்பை முடித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தனர்.
ஆன்லைன் விளையாட்டுகளும், டிக்டாக் வீடியோக்கள் செய்வதுமே அவர்களின் ஒரே வேலையாக இருந்துள்ளது. இதனிடையே, சமீபகாலமாக அவர்களின் டிக் டாக் வீடியோக்களுக்கு லைக்ஸ் அதிகம் வந்துள்ளது. இதனால் அவர்கள் ஒருவித மிதப்பில் இருந்து வந்தனர்.
வீட்டு பணத்தை திருடி ராட்சத பலூன்..
மேலும் அதிக லைக்ஸ் வாங்க ஏதேனும் வித்தியாசமாக டிக் டாக் செய்ய வேண்டும் என அவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, தங்கள் வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை திருடி அதன் மூலம் மிகப்பெரிய ராட்சத ஹைட்ரஜன் பலூனை அவர்கள் வாங்கியுள்ளனர். அந்த பலூனில் முன்னால் நின்றுக் கொண்டும், அதன் மீது ஏறி நின்றும் டிக் டாக் வீடியோ செய்ய வேண்டும் என்பதே அவர்களின் ஆசை.
திடீரென அறுந்த பலூன் கயிறு…
இதையடுத்து, தங்கள் நகரின் எல்லையில் உள்ள வனப்பகுதிக்கு அருகே உள்ள மைதானத்தில் அவர்கள் அந்த பலூனை கொண்டு சென்று, அதில் காற்றை நிரப்பி தரையில் உள்ள பெரிய கல்லில் அதை கட்டி வைத்தனர். பின்னர் அதில் ஏறி நின்று கொண்டு கெத்தாக டிக் டாக் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் பலூனில் கீழே இருக்கும் சறிய கட்டை போன்ற பகுதியில் ஏறி நிற்க, திடீரென கல்லில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து பலூன் வேகமாக மெலெழும்பியது. உடனே சுதாரித்துக் கொண்ட ஜியாங் வேய், அதிலிருந்து கீழே குதித்துவிட்டார்.
பலூனில் பறந்த சென்ஜிங் ஹு
ஆனால் கீழே குதிக்க பயந்த சென்ஜிங் ஹு, என்ன செய்வதென்று தெரியாமல் பலூனில் நின்றுக் கொண்டிருந்தார். இதில் சில நொடிகளிலேயே, ராட்சத பலூன் பல அடி தூரம் மேலே சென்றுவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல் பலூனில் கீழே இருந்த சிறிய கட்டையில் நின்றுக் கொண்டும், தொங்கிக் கொண்டும் சென்றார் சென்ஜிங் ஹு. சிறிது நேரத்தில் பலூன் பல நூறு அடி உயரம் சென்று மறைந்துவிட்டது. தனது நண்பன் பலூனில் சிக்கி பறப்பதை பார்த்த ஜியாங் வேய், உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு புகார் அளித்தார்.
போலீஸ் சொன்ன ஐடியா
இதன்பேரில் போலீஸார் பலூனில் பறந்துக் கொண்டிருந்த சென்ஜிங் ஹுவை செல்போனில் அழைத்தனர். அப்போது அதை எடுத்து பேசிய, சென்ஜிங் ஹு பலூனில் தான் பறந்து கொண்டிருப்பதாகவும், எங்கே இருக்கிறேன் எனத் தெரியவில்லை எனவும் கூறி அழுதிருக்கிறார்.
இதையடுத்து அவருக்கு தைரியம் கூறிய போலீஸார், கையில் ஏதேனும் கூரான பொருள் இருந்தால், பலூனை குத்திவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அவரிடத்தில் அப்படிப்பட்ட பொருள் இல்லை. பின்னர், தனது வாட்ச்சை கழட்டி, அதில் உள்ள கூரான கம்பியை எடுத்து பலூனில் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டுள்ளார் சென்ஜிங் ஹு.
தரையிறங்கிய பலூன்
இதனால் பலூனில் சிறிது சிறிதாக காற்று இறங்கி இரண்டு நாட்கள் கழித்து அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி கீழே விழுந்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸாரை அவர் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை தெரிவித்தார். இதன்பேரில் போலீஸார் அவரை மீட்டனர். பின்னர் அந்த இடம் எங்கு இருக்கிறது என்று பார்த்த சென்ஜிங் ஹு அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த இடம் தனது பகுதியில் இருந்து 400 கி.மீ. தூரத்தில் இருந்தது. அதாவது உதாரணமாக, சென்னையில் இருந்து அவர் பறந்ததாக வைத்துக் கொண்டால், மதுரையில் அவர் விழுந்திருக்கிறார் எனக் கூறலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் 400 கி.மீ. தூரம் உணவு தண்ணீர் இல்லாமல் இளைஞர் ராட்சத பலூனில் பறந்த சம்பவம் சீனாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.