* உலர் பூ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அசத்தல்
* பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு
திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பயன்படுத்திய டன் கணக்கான மலர்களை குப்பையில் வீசாமல் அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி உலர் பூ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கலை படைப்புகளை உருவாக்குவதற்காக டாக்டர் ஒய்எஸ்ஆர் தோட்ட பல்கலைக்கழகத்துடன் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இதற்காக, திருப்பதி அடுத்த பேரூர் அருகே சிட்ரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி முதல் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு 350 சுய உதவிக்குழு பெண்களுக்கு உலர் மலர் தொழில்நுட்பம் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற பெண்களில் ஒரு பெண் தினமும் 2 ஓவியங்கள் என உருவாக்கி வருகின்றனர். ஓவியங்களை உருவாக்க பூக்களை உலர்த்துவதற்கு 3 முதல் 4 நாட்கள் வரை நேரம் செலவிட்டு உருவாக்கப்படுகிறது. இதுவரை பயிற்சி பெற்ற பெண்கள் ஏ4 பேப்பர் அளவு கொண்ட 22,219 அளவு கொண்ட சுவாமியின் பல்வேறு படங்கள் மற்றும் 850 வகையான கலை படைப்புகளை தயாரித்துள்ளனர்.
மொத்தம் ₹1 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 56 மதிப்பிலான பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ₹83 லட்சத்தில் உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கான நிதியை வழங்கி சிட்ரஸ் ஆராய்ச்சி நிலையத்திற்கு விரைவில் நிரந்தர தொழிற்கூடம் அமைப்பதற்கான செயல்பாட்டுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 25ம் ேததி முதல் இந்த உற்பத்தி பொருட்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருமலை மற்றும் உள்ளூர் கோயில்கள், பெங்களூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் சென்னை தகவல் மையங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்தின் இந்த திட்டம் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சிறப்பான பாராட்டும் கிடைத்துள்ளது. உலர் மலர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்களை பார்வையிட்ட மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் மற்றும் ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பல அமைச்சர்கள் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்துள்ளனர்.