பழநி: சீசன் துவங்க உள்ள நிலையில், பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென வணிகர் சங்க பேரமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழநி நகரத் தலைவர் ஜே.பி.சரவணன் ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: கோயில் நகரான பழநியில் கார்த்திகை மாதம் துவங்கி வைகாசி மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் வருகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் கோடை விடுமுறை என பக்தர்கள் வருகை அதிகளவு இருக்கும். பழநி நகருக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நகருக்கு அகல ரயில்பாதை வசதி உள்ளது. தற்போது பாலக்காடு-பொள்ளாச்சி இடையே மின்சார ரயில்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்நிலையில் பழநி வழித்தடத்தில் திருவனந்தபுரம்-மதுரை, பாலக்காடு-சென்னை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும், கோவை-மதுரை, பொள்ளாச்சி-திருச்செந்தூர் பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தவிர, பழநி வழித்தடத்தில் மேட்டுப்பாளையத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
போதிய ரயில் வசதி இல்லாததால் பழநி வரும் பக்தர்கள் பெரும்பாலும் சுற்றுலா வாகனங்களிலும், பஸ்களிலுமே வருகின்றனர். சீசன் நெருங்கி வரும் நிலையில் பழநி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கினால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை உயரும். இதனால் பக்தர்களை நம்பி வியாபாரம் செய்யும் ஆயிரக்கணக்கான வணிகர்களின் வாழ்க்கை வளம் பெறும். எனவே, பழநி வழித்தடத்தில் கொச்சின், ராமேஷ்வரம், கன்னியாகுமரி, திருப்பதி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். இதன்மூலம் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்பாக அமையும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.