விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் தங்கபாண்டியனின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
எம்.டி.ஆர். நகரில் கடந்த 13-ம் தேதி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக செம்பட்டியைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது உடல்நல குறைவு ஏற்பட்டதால், தங்கபாண்டியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் கடந்த 14-ம் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார் தாக்கியதால்தான் தங்கபாண்டியன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்கபாண்டியன் வழக்கை ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றியும் அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவிப்பதாக அரசு தரப்பு வாதிட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, தங்கபாண்டியன் உடலை இரண்டு நாட்களுக்குள் பெறாவிட்டால் காவல்துறையே அடக்கம் செய்யலாம் என உத்தரவிட்டார். இதனை அடுத்து தங்கபாண்டியனின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM