இயற்கையின் படைப்பில் உயிரினங்கள் அனைத்துக்கும், காணும் காட்சிகளை ரசிக்க கண்கள் எப்படி முக்கியமானதோ, அதேபோன்று செயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கேமராக்களும் மனிதர்களிடம் இன்று முக்கியமான ஒன்றாக ஒன்றிவிட்டது. இத்தகைய கேமராக்கள் இன்றைய காலகட்டத்தில் மனிதனின் மூன்றாம் கண் என்றுகூட கூறலாம். காரணம், நினைவுகளை அப்படியே சேமித்துவைப்பது முதல், பல்வேறு குற்றங்களை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் உதவிகரமாக இருக்கிறது. முதலில் பெரும் ஆடம்பரமாக இருந்த இந்த கேமராக்கள் செல்போன்களில் வந்ததும், யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம் என்பது சாத்தியமாகிவிட்டது.
அதில் தொற்றிக்கொண்ட ஒன்றுதான் செல்ஃபி மோகம். கிட்டத்தட்ட அனைவருமே செல்ஃபி எடுப்பதில் அலாதி பிரியமுள்ளவர்கள் என்றுகூட கூறலாம். அழுதாலும் செல்ஃபி, சிரித்தாலும் செல்ஃபி, எங்கு சென்றாலும் செல்ஃபி, சாகசம் செய்யும்போது செல்ஃபி என என்ன நடந்தாலும் சரி எந்த இடமானாலும் சரி என்று பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டே இருப்பர். பின்னர் அந்த செல்ஃபி-க்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றமும் செய்வர்.
இந்த நிலையில், சீட்டாவை தூரத்தில் பார்த்தாலே நடுங்கிப்போகும் பலருக்கு மத்தியில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கூலாக சீட்டாவிடமே செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஐ.எஃப்.எஸ் அதிகாரி கிளெமென்ட் பென்(Clement Ben) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோவில், சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலாப் பயணிகளுடன் நிறுத்திவைத்திருந்த ஜீப்பின்மீது தூரத்திலிருந்து வந்த சீட்டா ஏறி, ஜீப்பின் மேற்கூரையில் அமர்ந்துகொள்கிறது.
அதனை ஜீப்பிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களுடைய செல்போன்களில் படமெடுத்துக்கொண்டிருக்கும்போது, திடீரென சுற்றுலா வழிகாட்டி கூலாக சீட்டாவின் அருகே வந்து செல்போனில் செல்ஃபி எடுக்கிறார். இதைக் கண்ட மற்ற சுற்றுலாப் பயணிகள் அந்த நபரை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். இந்த வீடியோ வைரலாக, சமூக ஊடக பயனர்கள் பலரும் இதற்கு கமென்ட் செய்துவருகின்றனர். அதில் ஒருவர், `இது எமராஜனுடன் செல்ஃபி எடுக்கும் தருணத்தைப் போன்றது’ என்று கிண்டலாக கமென்ட் செய்திருக்கிறார்.