தந்தை கண்டுபிடிக்க முயன்ற மர்மத்தை, மகன் கண்டுபிடிக்க முயலும், திருடன் போலீஸ் ஆட்டமே படத்தின் ஒன்லைன்.
நேர்மையான போலீஸ் அதிகாரி பிரபாகரன் (அதர்வா). ஒரு கடத்தல் கும்பலைப் பிடிக்க செல்லும் போது நடக்கும் பிரச்சனையால் வேலை பறிபோகிறது. ஆனாலும் அன்டர்கவர் போலீஸ் ஆக இருந்து, காவல்துறையினர் செய்யும் தவறுகளை கண்காணிக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் சிறைக் கைதிகளையும் அடியாட்களையும் ஒருங்கிணைத்து குழந்தைகளை கடத்துகிறான் மைக்கேல். எதிர்பாராத ஒரு சம்பவத்தால் ஹீரோ – வில்லன் மோதிக் கொள்ள நேர்கிறது. இந்தப் பிரச்சினையின் பின்னணியில் தன் தந்தையின் கடந்தகாலமும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறார் அதர்வா. குழந்தைகள் கடத்தப்படுவது எப்படி? எதற்காக கடத்தப்படுகிறார்கள்? அந்த கும்பலை எப்படி ஒழித்தார் ஹீரோ என்பதே மீதிக்கதை.
படத்தை விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லராக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன். எதேர்ச்சையாக ஹீரோவைத் தேடி வரும் ஒரு பிரச்சனை, அதன் பின்னணியைத் தேடிச் செல்லும் போது புலப்படும் உண்மை என களத்தை சுவாரஸ்யமாகவே அமைத்திருக்கிறார்.
அதர்வா வழக்கம் போல் ஆக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார். சில எமோஷனல் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், சீதா, கிருஷ்ணா, வினோதினி, அருண் பாண்டியன், ராமதாஸ், சின்னி ஜெயந்த் பலரும் இருக்கிறார்கள். செலக்டிவ் அம்னீஷியாவில் குழம்பும் அருண் பாண்டியன், குழந்தை இல்லை என வினோதினி வருத்தப்படுவது, இறந்த பின்பு தன் மகனிடம் தன்னைப்பற்றி கூறும்படி சொல்லும் இடத்தில் சின்னி ஜெயந்த் கவனிக்க வைக்கிறார்.
படத்தின் பிரச்சனை பரபரப்புக்கு ஏற்றவாறு காட்சியின் சூழலும், ஹீரோவின் செயலும் இல்லாததுதான். வில்லன் எல்லாவற்றையும் மிகச் சரியாக திட்டமிட்டு நடத்துகிறார். ஆனால் ஹீரோ அதர்வா பார்ப்பவர்கள் எல்லோரிடமும் “நான் சொல்றதக் கேளுங்க” என சொல்லிக் கொண்டே இருக்கிறார். அருகில் யாரும் இல்லை என்றால் போன் போட்டு “நான் சொல்றத கேளுங்க” என்கிறார். அப்படி அவர் சொல்லும் திட்டமும் சிறப்பானதாக இல்லை.
வில்லனாக வரும் மைக்கேல் கதாபாத்திரம் தன் கூட்டத்தை வைத்து செய்யும் திட்டங்கள் சுவாரஸ்யமானதாக இருந்தாலும், அவரின் கதாபாத்திர தன்மையை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எதற்காக சிறையில் இருந்து கொண்டு இவற்றை செய்கிறார் என்பதும் தெளிவாக சொல்லப்படவில்லை. தன் கூட்டத்தை தாக்கியது யார் எனத் தெரியாத வில்லன், தான் தாக்கிய கூட்டத்தின் தலைவன் யார் எனத் தெரியாத ஹீரோ இவர்கள் இருவரும் மோதப் போகிறார்கள் என்றதும் நாம் ஆர்வத்துடன் அமர்கிறோம். அதிலிருந்து சில காட்சிகளுக்குப் பின் ரிவர்ஸ் கியர் போட்டு பழைய படி சுவாரஸ்யமே இல்லாமல் நகர்கிறது கதை.
ஹேக்கிங் என்ற விஷயத்தை கதையின் முக்கியமான இடங்களில் எல்லாம் பயன்டுத்துவதும் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பையே ஏற்படுத்துகிறது. வழக்கமாக இது போன்ற கதைகளில் ஹீரோ – வில்லன் இடையேயான கேம் சுவாரஸ்யமாக இருக்கும் போதுதான், பார்வையாளர்களும் சோர்வு இல்லாமல் கதையை கவனிக்க முடியும். அந்த இடத்தில் கோட்டை விடுகிறது ட்ரிகர்.
கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு படத்தின் பல காட்சிகளை ஸ்டைலிஷாக காட்ட உதவியிருக்கிறது. திலீப் சுப்பராயணின் சண்டைக்காட்சிகளும் அதிரடியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசை மூலம் விறுவிறுப்பைக் கூட்டுகிறார்.
குழந்தைகள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்த அதிகாரி பாதிக்கப்படுகிறார். அதே வழக்கு எதிர்பாரத விதத்தில் அந்த அதிகாரியின் மகன் விசாரிக்கும்படி ஆகிறது. தந்தையிடம் இருந்து தப்பிய வில்லனை ஹீரோ எப்படி பிடித்தான் என ஆர்வத்தைத் தூண்டும் ஐடியா, படமாக பார்க்கும் போது எந்த ஆர்வத்தையும் தூண்டாமல் தேமே என செல்கிறது. ஹீரோவுக்கு வரும் ஆபத்துகளை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற பரபரப்பும் பார்வையாளர்களுக்கு தொற்றவில்லை.
ஒரு ஆக்ஷன் படம் போதும், பெரிய திருப்பங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை என நினைப்பவர்களுக்கு ஒரு ஒன்டைம் வாட்ச் படமாக அமையும் இந்த ‘ட்ரிகர்’. இந்த ஜானரில் அதிகம் எதிர்பார்க்கும் ஆடியன்சை எந்த விதத்திலும் ‘ட்ரிகர்’ செய்யாது படம்.
-ஜான்சன்