பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

கோவை: என்ஐஏ சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை நாடு முழுவதும் ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதிற்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் அந்த அமைப்பு இன்று காலை தொடங்கி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முழு அடைப்பை பொருட்படுத்தாமல் இயக்கப்பட்ட கேரள அரசு பேருந்துகள் மீது கல்வீசி அவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தனியார் வாகனங்களில் சென்றவர்கள் மீதும், காவல்துறை வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. கோட்டையத்திலும், கொச்சியிலும் ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டன ஊர்வலம் சென்றனர். தாக்குதல் நடத்திய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம் அடுத்த ஓத்துகோட்டூர் அடைக்கப்படாத கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கொச்சியிலும் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. கண்ணூரில் பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சிலர், பெட்ரோல் குண்டை வீசியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டல், ஆட்கள் சேர்ப்பு, தீவிரவாத பயிற்சி ஆகிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலங்களில் சோதனை நடைபெற்றது. இதற்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.