தூத்துக்குடி: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைப்பதற்காகவும், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம், மாணவிகள் விடுதியில் அதி நவீன உணவு விடுதி, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு-2 ஆகிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த காலங்களில் குறிப்பாக இந்த பருவநிலை மாற்றங்களின்போது இருந்த அளவு தான் தற்போது காய்ச்சலும் இருக்கிறது.
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. தற்போது உள்ள காய்ச்சல் பருவ நிலை மாற்றங்களால் ஏற்படுகிறது. இது ஒரு தனி வைரசால் பரவுகிறது. செப்டம்பர் 30 வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற ஒன்றிய அரசின் அறிவுரைக்கு ஏற்ப பொதுமக்களுக்கு எந்த கட்டணமும் இன்றி தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மெகா சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வாரம் கூட 50 ஆயிரம் இடங்களில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.
செப்டம்பர் 30க்கு பிறகு ஒன்றிய அரசு பூஸ்டர் தடுப்பூசி இலவச தடுப்பூசி குறித்து என்ன அறிவிப்பு வெளியிடுகிறதோ, அதன்படி நிறைவேற்றப்படும். வரும் 4ம் தேதி பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணிகள் 12 வயது முதல் 17 வயதிற்குள் எங்கெல்லாம் பாக்கி இருக்கிறதோ அந்த பள்ளிகளுக்கு நேரடியாக சென்றுக பள்ளிச் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற இருக்கிறது.
முதல் தவணை தடுப்பூசி 96%, இரண்டாவது தவணை தடுப்பூசி 91% சதவீதம், மாணவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி 12 முதல் 14வயது 90 சதவீதம், 15 முதல் 17 வயது 92% கடந்திருக்கிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை 4,308 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் பணியில் அமர்த்துவது சம்பந்தமாக தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, அதற்கு தகுந்தாற்போல் பணி நியமனங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதற்கான நேர்காணல் தேர்வு போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு மாத காலங்களில் தமிழகத்தில் அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. அப்படி பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்று சொன்னால் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.