‛‛நகர்ப்புற நக்சல்கள்’’.. அரசியல் பின்புலத்தோடு திட்டங்கள் முடக்கம்.. ஆக்ரோஷமான பிரதமர் மோடி

காந்தி நகர்: அரசியல் பின்புலம் கொண்ட நகர்புற நக்சல்களால் அரசு திட்டங்கள் முடங்குகின்றன. இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என குஜராத்தில் நடந்த அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களின் தேசிய அளவிலான மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் தவறான நோக்கத்தில் அரசு திட்டங்களை கிடப்பில் போட சிலர் உள்ளனர் எனக்கூறி வருந்தினார். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்தி மோடி பேசியதாவது:

நகர்ப்புற நக்சல்கள்

இந்தியாவில் அரசியல் பின்புலத்துடன் நகர்ப்புற நக்சல்கள் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான விரோத கும்பல்கள் ‛சர்தார் சரோவர்’ அணை கட்டும் பணியை முடக்கினர். இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என அவதூறான பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுத்தனர். இந்த காலதாமதத்தால் அதிகளவில் பணம் விரயமானது. இப்போது, அணை கட்டி முடிக்கப்பட்டதும், அவர்களின் பிரச்சாரம் எவ்வளவு சந்தேகத்திற்குரியவை என்பதை நீங்கள் நன்றாக அறிந்துகொள்ள முடியும்.

வளர்ச்சி வேகம் பெற வேண்டும்

வளர்ச்சி வேகம் பெற வேண்டும்

இந்தியாவில் இதுபோன்று தேவையின்றி இதுபோன்ற திட்டங்கள் முடங்கி தடைப்பட்டு விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இத்தகைய நகர்ப்புற நக்சல்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்டவர்களின் சதியை முறியடிக்க நாம் ஒரு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும். மேலும் பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. எந்த சமரசமும் இல்லாமல் திட்டங்களுக்கான அனுமதி விரைவாக வழங்கப்பட்டால் மட்டுமே வளர்ச்சி வேகம் பெறும்.

முன்னேறும் இந்தியா

முன்னேறும் இந்தியா

பல்வேறு மாநிலங்களில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி சுமார் 6,000 விண்ணப்பங்களும், வன அனுமதிக்கு கிட்டத்தட்ட 6,500 விண்ணப்பங்களும் இன்னும் நிலுவையில் உள்ளன. மேம்பாலங்கள், சாலைகள் மற்றும் ரயில்வே திட்டங்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க உதவுகின்றன என்பதையும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவோர் நினைவில் கொள்ள வேண்டும். புதிய இந்தியா என்பது புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நகர்ப்புற நக்சல்கள் யார்?

நகர்ப்புற நக்சல்கள் யார்?

இந்த உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி நகர்ப்புற நக்சல்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். பொதுவாக அரசியல் பின்புலத்துடன் சுற்றுச்சூழல் உள்பட பிற விஷயங்களை கூறி அரசின் திட்டங்களை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.