திருமலை: ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் போலீசாரை கொல்வதற்காக சாலையின் நடுவே நக்சலைட்கள் டிபன்பாக்ஸ் கண்ணிவெடி புதைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் உள்ள கிராமங்கள், வனப்பகுதிகளில் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ளது. இதனால், இரு மாநில போலீசாரும் இப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்ட எஸ்பி வருண் குண்டுபள்ளி கூறியதாவது: ஆந்திரா – ஒடிசா போலீசார் எல்லையில் உள்ள கிராமங்களில் இன்று அதிகாலை (நேற்று) சோதனை நடத்தினர். இதில், ஆந்திரா – ஒடிசாஎல்லையில் உள்ள சிந்திபுட் கிராமத்தில் நக்சல்களின் ஆயுத கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு ₹7 லட்சம் ரொக்கப்பணம், 31 ஜெலட்டின் குச்சிகள், 11 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், ஒரு பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திராவில் பார்வதிபுரம் மணியம் மாவட்டத்தில் போலீசாரை குறிவைத்து சாலையின் நடுவே நக்சல்கள் புதைத்து ைவத்திருந்த 2 டிபன் பாக்ஸ் கண்ணிவெடியும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவற்றை அகற்றினர். இவ்வாறு அவர் கூறினார். நக்சல்களின் ஆயுத கிடங்கு கண்டு பிடிக்கப்பட்டது, எல்லை கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.