மதுரை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் தேனி சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை மோசடியாக விற்பனை செய்வதுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர். உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை பதிவு செய்வதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
உள்ளாட்சி பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் உஷாராணி முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கிறார். இந்த அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை செப். 26க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.