புதுடெல்லி: தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா முயன்றார். இதுதொடர்பாக பல தலைவர்களைச் சந்தித்து பேசினார். அதைப் போலவே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான கே. சந்திரசேகர ராவும் இதே முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இதே முயற்சியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், ஆர்ஜேடி தலைவர் லாலுவும் முன்னெடுத்துள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவிட்டு அண்மையில் டெல்லி திரும்பி தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவரை சந்தித்து பேச பிஹார் முதல்வர் அமைச்சர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் நேரம் கேட்டு உள்ளனர். நாளை மாலை இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தியை, நிதிஷ்குமார் சந்தித்து பேச இருப்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நலம் குறித்து விசாரிக்கவே இந்த சந்திப்பு நடப்பதாக கூறப்பட்டாலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது. குறிப்பாக பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் திட்டங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தளக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.