ஈரோடு: புத்தம் புதிய பைக் வாங்குவதற்காக ரூ.3.56 லட்சத்திற்கு பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்து பவானியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பைக் வாங்கி உள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி மகன் சந்தோஷ்குமார் (25). உடற்கல்வி படிப்பு முடித்துள்ளார். தற்போது பவானியில் ‘பெட் ஷாப்’ நடத்தி வருகிறார். இவருக்கு கேடிஎம் பைக் வாங்க வேண்டும் என்பது நீண்டகால விருப்பமாக இருந்து வந்துள்ளது. இதற்காக பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து வந்துள்ளார். இதன்மூலம் ரூ.3.56 லட்சம் சேர்ந்தது. நேற்று நாணயங்களை சிறிய பைகளில் கட்டிக்கொண்டு ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஒரு ஷோரூமுக்கு சென்றார். அங்கு ரூ.3.56 லட்சத்துக்கு நாணயங்களை கொடுத்து புதிய பைக் வாங்கினார்.