பெங்களூரு: கர்நாடகாவில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளை தடை செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ ஆகிய கட்சியினர் மக்களிடையே திட்டமிட்டு பிரிவினைவாதத்தை பரப்பி வருகின்றனர். கடலோர கர்நாடாகாவில் மட்டுமல்லாமல் பெங்களூருவிலும் அந்த கட்சியினரால் மத ரீதியான மோதல்கள் நடந்தேறி இருக்கின்றன. பெங்களூரு கலவரம், ஹிஜாப் பிரச்சினை ஆகியவற்றின் பின்னணியிலும் அந்த கட்சியினரே இருந்தனர். அண்மையில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ ஆகிய கட்சியை சேர்ந்த 2 பேருக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டனர். அதன்
தலைவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக புகார் வந்ததாலேயே என்ஐஏ அதிகாரிகள் தேசிய அளவிலான சோதனையை முன்னெடுத்தனர்.
இதன் மூலம் மத்திய அரசு கட்சிகளுக்கு தடை விதிக்கும் பணிகளை தொடங்கியதாக தெரிகிறது. கர்நாடகாவில் அந்த கட்சிகளை தடை செய்யுமாறு பல்வேறு அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இரு கட்சிகளையும் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறோம். இவ்வாறு அரக ஞானேந்திரா தெரிவித்தார்.
14 பேர் கைது
கர்நாடகாவில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ ஆகிய கட்சியினரின் அலுவலகங்கள், வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 14 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 121, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.