நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் படம் ‘துணிவு’, அஜித்தின் வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். தற்காலிகமாக ஏகே61 என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் அதிகாரபூர்வமாக துணிவு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது, இப்படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து துணிவு என்கிற பெயரும் பட போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. சமீபத்தில் அஜித் பைக்கில் லடாக்கிற்கு ட்ரிப் சென்ற புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலான நிலையில் தற்போது துணிவு படத்தின் போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ‘துணிவு’ படம் வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுவதாகவும், இதற்காக சென்னையின் மவுண்ட் ரோடு பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் 1987ல் பஞ்சாபில் உள்ள வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு இயக்குனர் ஹெச்.வினோத் ‘துணிவு’ படத்தின் கதையை உருவாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி காலிஸ்தான் பிரிவினைவாதி, ஹர்ஜிந்தர் சிங் ஜிந்தாவுடன் கிட்டத்தட்ட 12 முதல் 15 சீக்கியர்கள் கையில் ஆயுதங்களுடன் போலீஸ் உடையணிந்து லூதியானாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மில்லர் கஞ்ச் கிளையில் கைவரிசையை காட்டினர். அந்த கொள்ளையில் அவர்கள் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தனர், இந்த தொகை அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய தொகை.
இந்த கொள்ளை சம்பவம் இன்றளவும் வரலாற்றில் சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்த கொள்ளை சம்பவத்தில் எவ்வித உயிருக்கும் ஆபத்து விளைவிக்கவில்லை. இந்த கொள்ளையர்கள் சிறப்பாக திட்டம் தீட்டியதாக போலீசார் கூறினர். ஆனால் இந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் ஹெச்.வினோத் ‘துணிவு’ படத்தை உருவாக்குகிறாரா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.