அகமதாபாத்: ‘நாட்டின் வளர்ச்சி திட்டங்களை நகர்ப்புற நக்சலைட்கள் முடக்க முயற்சிக்கின்றனர்,’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் ஏக்தா நகரில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு நேற்று நடைபெற்றது. இதை டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். பின்னர், மாநாட்டில் அவர் பேசியதாவது:
நகர்ப்புற நக்சல்களும், நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு எதிரானவர்களும் அரசியல் ஆதரவுடன் சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று பொய் பிரசாரம் செய்து, அணை கட்டும் பணியை முடக்கினர்.
இதனால் ஏற்பட்ட தாமதத்தால் மிகப்பெரிய அளவில் பண விரயம் ஏற்பட்டது. தற்போது, இந்த அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்களின் கூற்றுக்கள் எவ்வளவு பொய்யானவை என்பதை தற்போது உங்களால் தீர்மானிக்க முடியும். இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்ற கூற்றுக்கு மாறாக, அணையை சுற்றியுள்ள பகுதி தீர்த்த ஷேத்திரம் அல்லது சுற்றுச்சூழலை விரும்புவோரின் புனித இடமாக மாறியுள்ளது. நகர்ப்புற நக்சல்கள் இன்னும் சுறுசுறுப்பாக உள்ளனர். அவர்கள் வளர்ச்சி திட்டங்களை தடுக்க முயற்சிக்கின்றனர்.
எனவே, எளிய தொழில், வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாக கொண்ட திட்டங்கள், சுற்றுச்சூழல் என்ற பெயரால் தேவையின்றி முடக்கப்படுவதை தடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
6,000 விண்ணப்பங்கள் நிலுவை உள்ளது
மோடி தனது உரையில், ‘பல்வேறு மாநிலங்களில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி 6 ஆயிரம் விண்ணப்பங்களும், வனத்துறையின் அனுமதி கோரி 6,500 விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளன. இந்த தாமதங்கள் திட்டத்தின் செலவை அதிகரிக்கும். நிலுவை விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். பிரச்னைக்குரிய விண்ணப்பங்களை மட்டுமே நிலுவையில் வைக்க வேண்டும்,’ என்று தெரிவித்தார்.