திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகங்கள், நிர்வாகிகளின் இல்லங்களில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கேரளா உட்பட 15 மாநிலங்களை சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பிஎஃப்ஐ நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. எனினும் கேரளாவில் நேற்று அனைத்துக் கடைகளும் திறந்திருந்தன. அரசு பேருந்துகளும், ஆட்டோ, டாக்ஸிகளும் வழக்கம்போல் இயங்கின. பல்வேறு பகுதிகளில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்திய பிஎஃப்ஐ அமைப்பினர் கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினர். இதனால் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது.
கண்ணூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரிகளின் சாவிகளை போராட்டக்காரர்கள் பறித்ததால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிஎஃப்ஐ அமைப்பு வலுவாக இருக்கும் மலப்புரம், வயநாடு, கண்ணூர், பாலக்காடு, திருவனந்தபுரத்தில் கல்வீச்சு நடத்தியதில் 30-க்கும் அதிகமான அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கின. கோழிக்கோடு பகுதியில் நடந்த கல்வீச்சில் 15 வயது சிறுமியும், கண்ணூரில் நடந்த கல்வீச்சில் ஆட்டோ ஓட்டுநரும் காயம் அடைந்தனர். கோட்டயத்தில் லாட்டரி கடை சூறையாடப்பட்டது. ஈரோடு சென்று கொண்டிருந்த லாரி மீது கோழிக்கோடு பகுதியில் கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இதில் தமிழக லாரி ஓட்டுநர் காயம் அடைந்தார். இதனால் ஆலுவா பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினார். இந்த புகைப்படம், வீடியோவும் போராட்ட பரபரப்புகளுக்கு நடுவே இணையத்தில் வைரல் ஆனது.
நீதிமன்ற உத்தரவு மீறல்
ஏழு நாட்கள் அவகாசம் கொடுத்து முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் 2019 ஜனவரியில் அறிவுறுத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் பிஎஃப்ஐ அமைப்பினர் போராட்டத் தில் ஈடுபட்டதை உயர் நீதிமன்றம் கண்டித்து, தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அந்த அமைப்பின் கேரள பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் மீதும் நீதிமன்றம் வழக்குப் பதிந்துள்ளது. பொதுச்சொத்து, தனிநபர்களின் உடைமைகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.