போருக்கு ஆட்களைத் திரட்டும் புதின்… போராட்டத்தில் குதித்த மக்கள்! – என்ன நடக்கிறது ரஷ்யாவில்?

உக்ரைனுடனான ரஷ்யப் போர் 7 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் ரஷ்யாவின் கையே ஓங்கியிருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத உதவிகளால் உக்ரைன் ராணுவம் மெல்ல மீண்டெழுந்து, தாங்கள் ரஷ்யாவிடம் இழந்தப் பகுதிகளை ஒவ்வொன்றாக மீட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

உக்ரைன் ரஷ்யா போர்

தொலைக்காட்சியில் அறிவித்த புதின்:

இது குறித்து, சில நாள்களுக்கு முன்பாக தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுடன் உரையாற்றிய அதிபர் புதின், “மேற்குலக நாடுகள் ரஷ்யாவை அழிக்கத் துடிக்கின்றன. ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரில் ஈடுபடப்போவதாக மிரட்டுகின்றன. இதற்காக, அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் வழங்குகின்றன. இதைத் தடுத்துநிறுத்த, உக்ரைன் ராணுவத்தினரின் மேற்குல நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக மிகப்பெரிய போர்செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் எல்லைகளையும், ரஷ்ய மக்களையும் பாதுகாக்க அணு ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன்.

இது வெறும் வாய்சவடால் அல்ல; அணு ஆயுதங்களுடன் நம்மை மிரட்ட நினைப்பவர்களுக்கு, அணு ஆயுதங்கள் மூலமே பதிலடிகொடுப்பேன் என்கிறேன். மேலும், உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கு ஒப்புதலும் அளித்திருக்கிறேன்.

உக்ரைன் போர்

முக்கியமாக, உக்ரைனுடன் போர்செய்ய, ரஷ்யாவில் உள்ள 20 லட்சம் ராணுவ வீரர்களில், ஒரு பகுதியினரை தீவிரப் போருக்குத் தயாராக இருக்கவும், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட ரஷ்ய மக்களிடமிருந்து 3 லட்சம் பேரைத் திரட்டவும் உத்தரவிட்டிருக்கிறேன்” என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே சோய்கு, “ரஷ்யாவில் கூடுதலாக 3 லட்சம் வீரர்கள் போருக்குத் திரட்டப்படுவார்கள்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதிர்ந்த மக்கள், எழுந்த போராட்டம்:

இந்த உத்தரவினால் அதிர்ச்சி அடைந்த ரஷ்ய மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடுமுழுவதும் சுமார் 37 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1,500 ரஷ்ய மக்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

ரஷ்யா உக்ரைன் போர்

மேலும், “போராட்டத்தில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்” என ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர். இருப்பினும், பல்வேறு நகரங்களில் ரஷ்ய மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாகவும் ஒருதரப்பு மக்கள் குரல்கொடுத்து வருகின்றனர்.

தப்பியோடும் மக்கள், விமான டிக்கெட் நிறுத்தம்:

உக்ரைனுக்கு எதிராகப் போர்செய்ய 3 லட்சம் மக்களைத் திரட்ட ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதும், அதிர்ச்சியடைந்த ரஷ்ய இளைஞர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் பக்கத்து நாடுகளுக்கு விமான மூலம் தப்பிச்செல்ல முயன்று வருகின்றனர். ரஷ்யாவின் அண்டைநாடுகளான ஜார்ஜியா, அஜர்பைஜான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் விமான டிக்கெட் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டு விற்றுத் தீர்ந்தன.

உக்ரைன் – ரஷ்யா போர்

இதனால் அதிர்ச்சியடைந்த ரஷ்ய அரசாங்கம், 18 வயது முதல் 65 வயது வரையிலானோருக்கு டிக்கெட் விநியோகிக்க அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. மேலும், வெளிநாடு செல்லவிரும்பும் ரஷ்ய இளைஞர்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதிபெற்ற பின்பே செல்லமுடியும் என கிடுக்குப்பிடி போட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.