திருச்சூர், செப்.24-
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். சுமார் 3,570 கி.மீ. தூரத்துக்கு நடந்தே செல்லும் அவரது பாதயாத்திரையில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் பங்கேற்று உள்ளனர்.
ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை கடந்த 10-ந்தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. இது நேற்று முன்தினம் திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடிைய அடைந்தது. ஆனால் நேற்று அவர் யாத்திரையை ரத்து செய்து ஓய்வு எடுத்தார். அதன்படி சாலக்குடியில் உள்ள கன்டெய்னர் குடோன் ஒன்றில் ராகுல் காந்தியும், அவரது குழுவினரும் ஓய்வெடுத்தனர்.அத்துடன் பாதயாத்திரை குழுவினருக்கு மருத்துவ முகாம் ஒன்றும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ராகுல் காந்தி ஏற்கனவே கடந்த 15-ந்தேதி ஓய்வெடுத்த நிலையில், நேற்று 2-வது முறையாக ஓய்வெடுத்திருந்தார்.
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று நடத்திய முழு அடைப்பு போராட்டமும், ராகுல் காந்தியின் ஓய்வுக்கான காரணங்களில் ஒன்று என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது.