“பிரதமர் மோடிமீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரன்ட் திட்டம்!" – அமலாக்கப் பிரிவு அதிர்ச்சி தகவல்

இந்தியாவிலுள்ள பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ மற்றும் அமலாக்க இயக்குநரகம் நேற்று காலை சோதனை நடத்தியது. மேலும், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட குழுக்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம்சுமத்தப்படுபவர்கள் தொடர்புடைய இடங்களில், நாடு தழுவிய அளவில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி

இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை சேகரித்து ஒரே நேரத்தில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியிருக்கிறது. நேற்று சோதனையின்போது, கேரளாவிலிருந்து கைதுசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ உறுப்பினர் ஷபீக் பயேத்மீதான விசாரணையில், கடந்த ஜூலை 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பாட்னா வருகையின்போது தாக்குதல் நடத்த ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்ததாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், பல ஆண்டுகளாக இந்த அமைப்பால் சேகரிக்கப்பட்ட ரூ.120 கோடிக்கான விவரங்களையும் சேகரித்திருப்பதாக கூறியிருக்கிறது. பெர்வேஸ் அகமது, எம்.டி.இலியாஸ், அப்துல் முகீத் ஆகிய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மூன்று அலுவலகப் பொறுப்பாளர்கள் டெல்லியிலிருந்து அமலாக்கத்துறை இயக்குநகரத்தால் கைதுசெய்யப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரன்ட்

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள், “பி.எஃப்.ஐ மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் கணக்குகளில் பல ஆண்டுகளாக ரூ.120 கோடிக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அதன் பெரும்பகுதி இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அறியப்படாத மற்றும் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களிலிருந்து ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதி காலப்போக்கில் அவர்களின் தொடர்ச்சியான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்திருக்கிறது.

இதில் வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பிப்ரவரி 2020-ல் டெல்லி கலவரங்களுக்கு வழிவகுத்த பிரச்னைகள், ஹத்ராஸுக்கு பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் வருகை ஆகியவை அடங்கும். விசாரணையின்போது, ​​பி.எஃப்.ஐ உறுப்பினர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டன” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.