உங்க மகன், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து இறங்கி, 13 வருஷமாகிடுச்சு… இன்னும் பழைய நினைப்பு போகலையா?| Dinamalar

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கி கொள்ள பரிந்துரைக்குமாறு, டாக்டர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. பா.ம.க., தலைவர் அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தான், மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம்.

உங்க மகன், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து இறங்கி, 13 வருஷமாகிடுச்சு… இன்னும் பழைய நினைப்பு போகலையா?


ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை
: தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் நடந்த பூமி பூஜை விழாவில், தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார் பங்கேற்று, ‘இதுபோன்ற பூஜைகள் செய்தால், ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன்’ என மிரட்டி உள்ளார். பூமி பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த செங்கல், கற்களை எட்டி உதைத்துள்ளார்.

எடக்கு மடக்காக பேசிய எம்.பி., ஆ.ராஜாவுக்கு கிடைக்கிற, ‘நெகட்டிவ் பப்ளிசிட்டி’ இவர் கண்களை உறுத்தியிருக்கும் போலிருக்குது!

அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை

: பழனிசாமி அ.தி.மு.க., தன்னை முழுமை யான ஜாதிக் கட்சியாக பிரகடனம் செய்திருக்கிறது. இதை, பொது மேடையில் செங்கோட்டையன் அறிவித்து இருக்கிறார். தென் மாவட்டத்தில் உள்ள எந்த சமூகத்தின் தயவும், தங்களுக்கு வேண்டாம் என்பதை வெளிப்படையாகவே, பழனிசாமி தரப்பு அறிவித்திருக்கிறது.

அவங்க அப்படி அறிவிச்ச மாதிரி தெரியலையே… நீங்க தான் சந்துல புகுந்து சிண்டு முடியுற மாதிரி தெரியுது!

மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை:

தமிழக சட்டசபையின், அடுத்த கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில், லஞ்சம், ஊழலை கட்டுப்படுத்துவதோடு, அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வழிவகுக்கும், ‘சேவை பெறும் உரிமை’ சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

‘இச்சட்டத்தை நிறைவேற்றுவோம்’ என, ஆளுங்கட்சியான தி.மு.க., தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தது.தேர்தல் வாக்குறுதியா…? கண்டிப்பா நிறைவேற்ற மாட்டாங்க பாருங்க!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி: தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் – ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. தி.மு.க., – எம்.பி., – ஆ.ராஜா பேச்சால், நிலைமை மேலும் மோசமாகி விட்டது. ஏற்கனவே அவர் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பிறப்பு குறித்து தவறாக பேசினார்.

அவருக்கு, முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பூட்டு போட வேண்டும். ஆனால், ஸ்டாலின், ‘எதையும் தாங்கும் இதயமாக’ இருக்கிறார்.இந்த விவகாரத்தில், ‘எதையும் தாங்கும் இதயமாக’ இருப்பது ஹிந்துக்கள் தான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.